Nagaratharonline.com
 
செட்டிநாடு பவுண்டேஷன் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு  Oct 30, 11
 
செட்டிநாடு பவுண்டேஷன் நடத்தும் 36 "ஏ' பள்ளிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் 36 "ஏ' பள்ளிகளை, செட்டிநாடு பவுண்டேஷன் துவக்கியது. இப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., முதல் வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.

இந்த குழந்தைகளின் பெற்றோர் 13 பேர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: செட்டிநாடு பவுண்டேஷன் நடத்தும் 36 "ஏ' பள்ளிகளுக்கும், மாநில அரசு, மத்திய அரசின் அங்கீகாரம் இல்லை. பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் இல்லை. போதிய கழிப்பறை வசதியின்றி, தனி வீடுகளில் இந்தப் பள்ளிகள் இயங்குகின்றன. அசோக் நகர் கிளையில் 280 மாணவர்கள் உள்ளனர். அங்கு ஆறு கழிப்பறைகள் தான் உள்ளன. அரசு நிர்ணயித்த கட்டணத்தை பின்பற்றவில்லை. குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. பதிவுக் கட்டணம் என்ற பெயரில் ஆண்டு தோறும் நன்கொடை வசூலிக்கின்றனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

செட்டிநாடு பவுண்டேஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "36 பள்ளிகளிலும் 3,397 பேர் படிக்கின்றனர். உள்நோக்கத்துடன் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனி பங்களாவில் இப்பள்ளிகள் இயங்குகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் போதிய அளவில் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் உள்ளன. பள்ளிகளை மூடினால், மாணவர்கள் பாதிக்கப்படுவர்' என கூறப்பட்டுள்ளது.

நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: கடந்த 2009ம் ஆண்டு 36 பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. தமிழக அரசிடமோ, சி.பி.எஸ்.இ., வாரியத்திடமோ அனுமதி கோரியோ, அங்கீகாரம் கோரியோ இதுவரை விண்ணப்பிக்கவில்லை. எனவே, எந்த அங்கீகாரமும், அனுமதியும் இல்லாமல் இந்த பள்ளிகள் இயங்கி வருகின்றன. எனவே, இந்த 36 பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க, கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த நடவடிக்கை எடுக்கும் வரை, மனுதாரர்களிடம் இருந்து மேற்கொண்டு கட்டணம் கோருவதற்கு, பள்ளி நிர்வாகத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

source : Dinamalar