Nagaratharonline.com
 
NEWS REPORT: கந்த சஷ்டி : சூரபத்மன் வீழ்ந்த கதை  Oct 23, 11
 
 
பக்தியில் சிறந்தவன் தட்சன் என்ற அரசன். சக்தியை நேசித்து, சிவனை யாசித்து கடுந்தவம் புரிந்தவன். சக்தியை தன் மகளாகப் பிறந்து மீண்டும், பூமியில் சிவபெருமானை திருமணம் செய்ய வேண்டும் என்று வரம் கேட்டான். அன்னையும் அவ்வாறே வரமளித்து பூவுலகில் தட்சனின் மகளாகப் பிறந்தாள். தட்சனின் மகள் ஆனதால் தாட்சாயணி என்று பெயரிடப்பட்டு வளர்ந்தாள். பாலில் குளிப்பாட்டி வளர்க்கப்பட்டாள். இதனால்தான் அன்னைக்கு பால் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

தாட்சாயணி மணப்பருவம் அடைந்தவுடன் ஈசனே தனக்கு கணவனாக வரவேண்டும் என்று ஈசனை நோக்கி தவமிருந்தாள். தட்சனும் தன் தவவலிமையால் சிவலோகம் சென்று தன் மகளை மனம் புரியுமாறு சிவபெருமானை வேண்டினான். தேவியை அடையும் காலம் வரும் சமயத்தில் வருவதாக சிவபெருமானும் வாக்களித்தார்.

நெற்றியில் மூன்று கண்கள்,இடுப்பில் புலித்தோல், கழுத்தில் பாம்பு, தலையில் கங்கை, நெற்றியில் சாம்பல்.. இந்த உருவத்தில் தன் வருங்கால மருமகனை பார்த்தவுடன் தட்சனின் மனைவி மயக்கம் அடைந்துவிட்டாள். இந்த உருவமுடைய மாப்பிள்ளைக்கு என் மகளை தர மாட்டேன் என்று சொன்னவுடன் , ஈசனும் தன்னுடைய அழகான வடிவத்தில் காட்சிதந்து, தட்சனின் மனைவியிடம் "அழகு நிலையானதல்ல" என்று கூறினார் .பின் திருமணமும் நடைபெற்றது. தாட்சாயிணி பார்வதி என அழைக்கப்பட்டாள்.

இந்த நேரத்தில் தட்சன் யாகம் ஒன்றை நடத்த விரும்பினான், ஈசனே தனக்கு மருமகனாக வந்ததால் அவன் மனதில் ஆணவம் தோன்றியது. யாகத்திற்கு மருமகனை அழைக்க வந்தான். தட்சனை சிவபெருமான் எழுந்து நின்று வரவேற்கவில்லை. மாமனாருக்கு மரியாதை கொடுக்காத ஈசனை யாகத்திற்கு அழைக்க விரும்பாமல் மகளை பார்க்க வந்தேன் என்று பொய் சொல்லிவிட்டு, பிரம்மா, திருமால் மற்ற தேவர்கள் ஆகியோரை அழைத்தான்.

யாகத்திற்கு அனைவரும் சென்றது பார்வதிக்கு தெரிய வர, தந்தைக்கு புத்தி புகட்டுவதற்காக பூலோகம் செல்ல ஈசனிடம் அனுமதி கேட்டாள். ஈசன் மறுத்தார். கணவனது சொல்லையும் மீறி பூலோகம் சென்று தன தந்தையிடம் நியாயம் கேட்டாள். தட்சன் மகளை அவமானப்படுத்தி அனுப்பி விட்டான், பார்வதி ருத்ரகாளியாகவும், சிவன் வீரபத்திரராகவும் உருவெடுத்து தட்சனின் யாகசாலையை அழித்தனர். மாமனாருக்கு சாபம் ஒன்றை கொடுத்தார் சிவன்.“நீ ஆணவத்தால் என்னை அவமதித்தாய்! மறுஜென்மத்தில் சூரபத்மன் என்று பெயர் பெறுவாய்.! உனக்கு அசுர குணங்களே தலை தூக்கும்! இறுதியில் சுப்பிரமணியன் என்ற சக்தியிடம் நீ மாண்டு போவாய்” என்று சாபம் கொடுத்தார்.

அசுர குலத்தினர் தங்கள் இனத்தை விருத்தி செய்ய வேண்டும் என்பதற்காக தங்கள் குலகுரு சுக்ராச்சாரியாரின் யோசனைப்படி தங்கள் சகோதரியை காசியப முனிவர் என்பவரிடம் அனுப்பி அவரை மயக்கினர். முதலில் மயங்காத முனிவர் பின் அவளது அழகில் மயங்கி சூரபத்மன் (பத்மாசுரன்) ,சிங்கமுகன் என்ற மகன்களையும் அஜமுகி என்ற மகளையும் பல அசுரக் குழந்தைகளையும் பெற்றார். பின் தன் தவறை உணர்ந்து மீண்டும் தவம் செய்யப் போய் விட்டார்.

இந்த சூரபத்மன் (பத்மாசுரன்) உலகை அடக்கி ஆண்டான். ஒரு பெண்ணின் சம்பந்தத்துடன் பிறக்கும் எந்த உயிராலும் அழிவு வரக்கூடாது என்ற வரமும் பெற்றான். தன்னை யாரும் கொல்ல முடியாது என்ற தைரியத்தில் அட்டகாசம் செய்து வந்தான். தேவர்களைக் கொடுமை செய்தான். இந்திரன் மகன் ஜெயந்தனை சிறையில் அடைத்தான். முடிவு என்ன ?

தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய சிவபெருமான், சக்தியின் சம்பந்தம் இல்லாமல் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிவந்த அக்கினிப் பொறியில் சுப்பிரமணியனை உருவாக்கினார், இவர் திருச்செந்தூர் கடற்கரையில் வீரபாகு துணை யுடன் சூரபத்மனை வதம் செய்தார்

தான் இறக்கும் தருவாயில் சூரபத்மனுக்கு தன்னுடைய முன்ஜென்ம நினவு வந்தது. எதிரே நிற்பது தன் பேரன் என்று புரிந்து கொண்டான். “முருகா! என் ஆணவம் அழிந்தது, முற்பிறவிப்படி நீ என் பேரன்! உன்னை என் முதுகில் சுமக்க விரும்புகிறேன். என் மீது நீ காலம் முழுவதும் இருந்தால் மீண்டும் ஆணவம் எனக்கு வராது” என்றான். சுப்பிரமணியரும் சூரனின் உடலை இரு கூறாக்கி ஒரு பகுதி உடலை மயிலாக மாற்றி அதன் மீது அமர்ந்தார். மறு பகுதியை சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தி, தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டார்.

தேவர்கள்,சுப்பிரமணியனை எண்ணி விரதம் அனுசரித்த நாட்கள்ஆறு.
அவர் பிறந்தபோது இருந்த முகங்கள் ஆறு (ஆறுமுகம்).
அவரை வணங்கப் பயன்படுத்திய மந்திரத்தின் எழுத்து ஆறு (சரவணபவ)
அவர் குழந்தையாக இருந்த நாட்கள் ஆறு.
அவர் பிறந்த திதி சஷ்டி (ஆறாவது திதி)
அவரை வளர்த்தவர்கள் கார்த்திகை தேவியர் என்னும் ஆறு பெண்கள்.
சிவனின் நெற்றிப் பொறிகள் போய் விழுந்த கங்கையும் ஒரு ஆறு (நதி)
இதனால்தான் நாம் ஆறு நாட்கள் விரதம் இருக்கிறோம் .


""காலைத் தொழுதாலும் கந்தா உன் கையிலிருக்கும்
வேலைத் தொழுதாலும் வேல் கழுவிக் கால் வழியும்
பாலைத் தொழுதாலும் பாய்ந்து வரும் உன் மயிலின்
வாலைத் தொழுதாலும் வாழ்வு"".
,,,,,,,,,,,,அர .சி

Editor. nagarathargateway.com