Nagaratharonline.com
 
வெளிச்சந்தையில் மின்சார விலை எகிறியது: நேற்று மட்டும் ரூ.18 கோடிக்கு கொள்முதல்  Oct 10, 11
 
தொடரும் போராட்டங்களால், வெளிச்சந்தையில் மின்சார விலை, நேற்று இரண்டு மடங்காக எகிறியது. நேற்று மட்டும் சுமார் 18 கோடி ரூபாய்க்கு, தமிழகத்தில் மின்சாரம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில், தெலுங்கானா போராட்டத்தால், சிங்கரேணி சுரங்கம் முடங்கிவிட்டது. நிலக்கரி கிடைக்காமல், மத்திய அரசின் அனல்மின் நிலையங்களில், பல யூனிட்கள் மூடப்பட்டுள்ளன.மின் உற்பத்தி குறைந்ததால், தென் மாநிலங்களுக்குக் கிடைக்கும் மத்திய தொகுப்பு மின்சாரத்தின் அளவு, பாதியாகக் குறைந்து விட்டது.

இதில், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தான், அதிக மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க, தமிழகமும், ஆந்திராவும் மட்டும் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குகின்றன. மற்ற மாநிலங்கள், பல மணி நேர மின்வெட்டை அமல்படுத்தியுள்ளன.வெளிச்சந்தையில் மின்சார விலை, நேற்று இரண்டு மடங்காக உயர்ந்தது. இந்திய எரிசக்தி பரிவர்த்தனை நிறுவனத்தில், நேற்றைய நிலவரப்படி, யூனிட்டுக்கு அதிகபட்சம் 10.20 ரூபாயாகவும் குறைந்த பட்சம் 5.87 ரூபாயாகவும் இருந்தது; சராசரியாக 7.05 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்திற்கு, நேற்று மட்டும், 2.60 கோடி யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் விலை, 18 கோடியே 30 லட்ச ரூபாயாகும்.


source : Dinamalar