Nagaratharonline.com
 
சிவகங்கை : அரசு பஸ் முன்பதிவில் முறைகேடு ?  Oct 4, 11
 
சிவகங்கையிலிருந்து சென்னை செல்லும் அரசு பஸ்ஸýக்கு முன்பதிவு செய்வது, இட ஒதுக்கீடு, டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்பப் பெறுவது ஆகிய பணிகளில் முறைகேடு, விதிமீறல்கள் நடைபெறுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கையிலிருந்து சென்னைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நாள் தோறும் 2 பஸ்களை இயக்குகிறது.
இவற்றில் 7 நாள்களுக்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால், சிவகங்கையில் 3 நாள்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது.
முன்பதிவு செய்த பயணச் சீட்டை ரத்துசெய்து பணத்தை திரும்பப் பெறும்போது, 48 மணி நேரத்துக்கு முன் என்றால் 10 சதவீத பணம் கழிக்கப்படும், 48 முதல் 24 மணி நேரத்துக்கு முன் என்றால் 20 சதவீத பணமும், 24 மணி நேரம் முதல் 30 நிமிடம் வரை என்றால் 25 சதவீத பணமும், அதற்கும் குறைவான நேரம் என்றால் 50 சதவீத பணமும் கழித்து மீதித் தொகை அளிக்க வேண்டும்.
ஆனால், இந்த விதிகள் பின்பற்றப்படாமல் குறைந்த அளவு பணமே திரும்பத் தரப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
சீட் ஒதுக்கீட்டில் முதல் வரிசையில் உள்ள 1,2,3,4 ஆகிய இருக்கைகள் பெண்களுக்கும், 7,8 ஆகியவை எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும், 9,10 போக்குவரத்து நிர்வாகிகளுக்கும் (இது அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டது) போக 5,6-ம் எண் இருக்கையிலிருந்து முன்பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆனால் 5,6 சீட்களையும் விட்டுவிட்டு 11-ம் எண் சீட்டில் இருந்துதான் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த சீட்டுகளில் குறிப்பிட்ட நபர்கள் வரவில்லை என்றால், அவை அவசரமாக சென்னைக்கு செல்வோருக்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.
அதேபோல, 3 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு (130 செ.மீ. உயரம்) அரை டிக்கெட் எடுக்கலாம் என்ற விதி உள்ளது. ஆனால், அரை டிக்கெட் எடுத்தால் பெற்றோர்கள் அவர்களை மடியில் உட்கார வைத்துக்கொள்ள வேண்டும் என நடத்துனர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
இல்லையென்றால், முழு டிக்கெட் எடுக்கும்படி வற்புறுத்துகின்றனராம்.


source ; Dinamani