Nagaratharonline.com
 
ஒளியிழந்துவரும் அரியக்குடி பித்தளை விளக்குகள்  Sep 10, 09
 
காரைக்குடி, செப். 9: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடியில் பித்தளை விளக்குகள் மற்றும் உலோகச் சிற்பங்கள் தயாரிக்க தொழிலாளர்கள் கிடைக்காமலும், அரசு ஆதரவில்லாமலும், இத் தொழில் நாளுக்கு நாள் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

பித்தளை குத்து விளக்குகள், காயத்ரி விளக்குகள், லெட்சுமி விளக்குகள், யானை விளக்குகள், கைமணி, ஆலயமணி, சுவாமி சிலைகள் உலோகச் சிற்பங்கள் என கைவினைப் பொருள்கள் உற்பத்தியில் 20-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் அரியக்குடிப் பகுதியில் உள்ளன.

நூற்றுக்கணக்கான கைவினைக் கலைஞர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுவந்த நிலை மாறி, தற்போது தொழிலாளர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, முற்றிலும் தொழிலை இழக்கும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் இதுபோன்ற அரிதான உலோக சிற்ப வேலையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அரசு சார்பில் முழுமையான ஆதரவு அளிப்பதில்லை என்கிறார் அரியக்குடி மெட்டல் கிராப்ட் அண்டு ஷீட் மெட்டல் கைவினைக் கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கே. சுந்தரராஜன்.

அவர் மேலும் கூறியது:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொராதாபாத், அலிகார் போன்ற நகரங்களில் பித்தளைப் பொருள்கள் உற்பத்தியில் சுமார் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அனைத்துத் தேவைகளையும் அந்த மாநில அரசு பூர்த்தி செய்து தருகிறது. அரியக்குடியில் முன்பெல்லாம் நகரத்தார்களுக்கென பித்தளை விளக்குகள், திருமண சீர்வரிசையில் வைக்கக் கூடிய மாவிளக்குச் சட்டி போன்றவை மட்டுமே தயாரித்தோம். அப்போது இப் பகுதியில் 4 பட்டறைகள்தான் இருந்தன. பின்னர், பித்தளையில் பெரிய அளவு குத்துவிளக்குகள் தயாரிக்கத் தொடங்கினோம். இவ் விளக்குகள் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரிய நகரங்களில் பிரபலமடையத் தொடங்கியதால், அரியக்குடியில் அதிக அளவிலான பட்டறைகளும், காரைக்குடி, கண்டனூர் போன்ற இடங்களிலும் பட்டறைகள் அமைத்து பல ரகங்களில் பித்தளை விளக்குகள் தயாரிக்கும் தொழிலில் பலர் ஈடுபடத் தொடங்கினர்.

இவ் விளக்குகளுக்கு மவுசு அதிகம். அதேபோன்று தேவைகளும் அதிகம் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் விளக்குகளை நமது மாநிலத்தைத் தவிர வேறு மாநிலங்களுக்கோ, வெளிநாட்டுக்கோ அனுப்ப முடியவில்லை. ஏனெனில், உற்பத்திக் குறைவு. உற்பத்தியை உயர்த்துவதற்கு தேவையான தொழிலாளர்கள் இல்லாமையும், அரசின் முழுமையான ஆதரவும் இல்லாமையுமே காரணம்.

இந்தத் தொழிலைக் கற்றுத் தர கனரா வங்கி பயிற்சி மையம் ஒன்றை நிறுவியுள்ளது. இங்கு இலவச உணவு, தங்கும் வசதி தந்து கைவினைக் கலைஞர்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், போதுமான அளவுக்கு இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை.

பொதுவாக, ரூ. 800 முதல் ரூ. 1000 வரை விலை மதிப்புள்ள பெரிய விளக்குகளைத் தயாரிக்கிறோம். இதற்கு மூலப்பொருள்கள் மற்றும் முதலீடும் அதிகம் செய்ய வேண்டியிருப்பதால், ரூ. 100-க்கு கீழே விலையைக் கொண்ட சிறிய விளக்குகள் தற்போது அதிக அளவில் தயாரித்து வருகிறோம். பெரும்பாலும் ஆர்டர்கள் தந்து கடைகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்வார்கள். பித்தளையுடன் துத்தநாகம், செம்பு கலந்து விளக்குகள் தயாரிக்கப்படும். நுணுக்கமான வேலைப்பாடுகளும் விளக்குகளில் இடம்பெறுவதால், பலரைக் கவரும் வகையில் விளக்குகள் உள்ளன.

தற்போது மதுரையைச் சேர்ந்த "சிப்போ' அமைப்பினர் இந்தத் தொழிலை காப்பாற்ற தேவையான முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். தொழிலை மேம்படுத்த வங்கிகள் கடனுதவி செய்ய வேண்டும்.

கைவினைக் கலைஞர்கள் சங்கத்துக்கு பயிற்சி மற்றும் கூட்டங்கள் நடத்த ஓர் இடம் தேவை. அதற்காக அரியக்குடி பள்ளியின் அருகே பயனின்றி பூட்டிக் கிடக்கும் அரசு மகளிர் மேம்பாட்டுக் கட்டடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அந்த இடத்தைத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் சுந்தரராஜன்.

Source: Dinamani Sep 10th 2009