Nagaratharonline.com
» All
» Chettinad Toursim
» Chettinad Temples
Chettinad Temples
     
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக்
கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க
முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். குதிரைகள்
பூட்டிய தேரில் முருகப் பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க, முருகனின்
படைகள் அணிவகுத்து சென்றன.

அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின்
படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும்
திகைத்து நிற்க, அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி சொல்ல தொடங்கினார். இந்த மலை
கிரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் தீமைகளை புரிந்த தீய சக்தி
ஆகும்.

அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த
இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து
கொண்டிருக்கிறது என்றார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம்
என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி
செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற
தகவலையும் சொன்னார்.

அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம்
படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி
கட்டளையிட்டார். தலைவனின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள்
மாயாபுரி பட்டினத்திற்குள் நுழைந்தன. இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன்
எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து
விழுந்தனர்.

போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன்,
முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான்.
இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம்
கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான்.


மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவை தாரகாசுரன் எள்ளி நகையாட, முருகனின் படைகள்
நாலாபுறமும் சிதறி ஓடின. மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக
தாக்கினான். எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம்
எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான்.

வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற
வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது.
தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன.
இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார்.
வந்தவரின் வலிமை அறியாத தாரகாசுரன், சிறுவன் என முருகனை கிண்டல் செய்தான்.


கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். தாக்குதலை
சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலை களை காட்ட
ஆரம்பித் தான். முருகப் பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார்.
துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத் தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன்
பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.
 
Source:Maalaimalar.com