Nagaratharonline.com
 
70 ஆண்டை கடந்தும் உருக்குலையாமல் நிற்கும் செட்டிநாட்டு மின் கம்பங்கள்  Dec 29, 17
 
காரைக்குடி பள்ளத்துார், கானாடுகாத்தான் பகுதிகளில் நகரத்தாரால் 1945--1950-ம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட இரும்பு மின்கம்பங்கள் எவ்வித சேதாரமுமின்றி கம்பீரமாக காட்சியளித்து சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் உள்ள பொது பிரச்னை என்றால் அது மின்கம்பம் பழுதுதான். பல மட்டத்தில் கமிஷன் கைமாறி பெயரளவில் நடக்கும் பணிகளால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.
ஆனால், எந்த வித கமிஷனுமின்றி மக்கள் பயன்பாட்டுக்காக தனியார்களால் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் 70 ஆண்டை கடந்தும் இன்றும் பொலிவுடன் திகழ்கிறது.

தமிழக மின்வாரியம் கடந்த 1957-ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி உருவாக்கப்பட்டது.
அதற்கு முன்பு தமிழகத்தில் மின் உற்பத்தி, சப்ளை ஆகிய இரண்டும் தனியார் வசம் இருந்தது. செட்டிநாட்டு பகுதியில் நகரத்தார் மின் உற்பத்தி செய்து சப்ளை செய்தனர்.
எதிலும் நேர்த்தி, உறுதி என்ற கோட்பாட்டை உடையதால், அவர்கள் அமைத்த மின்கம்பங்கள் இன்றும் கம்பீரமாக நிற்கின்றன. ரயில் தண்டவாளங்கள் இரண்டை இணைத்து கிளாம்பிங் செய்யப்பட்டு நடப்பட்டுள்ளது.
மின்வாரிய அலுவலர் ஒருவர் கூறும்போது, தற்போது பள்ளத்துாரில் இது போன்ற மின்கம்பங்கள் 500-க்கும் மேல் உள்ளது. வடகுடி, கானாடுகாத்தானில் 300-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்கள் 20 முதல் 30 அடி உயரம் கொண்டதாக இருக்கும். தாமிர மின்கம்பிகள் பயன்படுத்தப்பட்டன.
தற்போதைய மின்கம்பங்கள் அதிக பட்சம் ஐந்து ஆண்டு தாங்குவதே அரிதாக உள்ளது. மின் வழித்தட கம்பிகள் அலுமினியத்தால் அமைக்கப்படுவதால், மின் இழப்பு ஏற்படுவதுடன் அடிக்கடி பழுதும் ஆகிறது.
நீண்ட தொலைவுக்கு செல்லும்போது 240 வோல்ட் 190 ஆக குறைந்துவிடுகிறது. மழை காலங்களில் அலுமினியமும், தாமிர கம்பியும் இணையும் இடத்தில் பூஞ்சை பாக்டீரியா வளர்ந்து மின் இணைப்பை துண்டித்து விடுகிறது.
நிலைத்து உழைக்க வேண்டும் என அப்போதைய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது காசு நிலைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மின்கம்பங்கள் நடப்படுகிறது. டூவீலர் மோதினால் கூட மின்கம்பம் சாயும் நிலைதான் உள்ளது, என்றார்.