Nagaratharonline.com
 
NEWS REPORT: செவ்வாய் தோஷம்... அச்சம் வேண்டாம் - விதி விலக்கு இருக்கு!  Dec 18, 17
 
செவ்வாய் தோஷம் எனப்படும் அங்காரக தோஷம் இன்று பலராலும் பல கற்பனைகளையும் கட்டுகதைகளையும் சேர்த்து புனைந்து ஓரு பூதாகரமான விஷயமாக கல்யாணத்திற்கு பெரும் தடையாக பேசப்படும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது.

இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என சோதிடம் கூறுகிறது.

லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும். அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் திசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கணிக்கிறது. 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது. நடைமுறையில் லக்கினத்தை மட்டுமே கணக்கில் எடுத்து பெரும்பாலான ஜோதிடர்கள் கூறுவர். சிலர் முதல் வீட்டையும் கணக்கில் எடுப்பது உண்டு.

செவ்வாய் தோஷம் விதி விலக்குகள்: மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும். மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது. குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் அல்லது பார்க்கப் பட்டால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். சிம்மம் , ரிஷபம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். 4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். 7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். 8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது. ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ,பெண்களுக்கு 8ம் இடத்தையோ குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது. 7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

செவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரங்கள் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது. இதே போல் நிறைய விதி விலக்குகள் உண்டு.

செவ்வாய் தோஷம் எப்படி ஏற்பட்டது?
நீர் காரகனான சந்திரனால் ஏற்படும் நோயை ஜல தோஷம் என கூறி மருத்துவம் செய்துக்கொள்கிறோம். ஆனால் செவ்வாயினால் உடம்பில் ஏற்படும் மாற்றத்தை செவ்வாய் தோஷம் என கூறி திருமண வாழ்க்கையையே சீரழித்து விடுகிறோம்.

ரத்தத்தின் காரகன் செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட சற்றே கூடுதலான உணர்ச்சி இருக்கும் . அது சிலருக்கு கோப உணர்ச்சியாகவும் சிலருக்கு வேக உணர்ச்சியாகவும் சிலருக்கு காம உணர்ச்சியாகவும் இருக்கும்.

செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் இருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களையே செவ்வாய் தோஷம் பெற்றவர்களாக கூறப்படுகிறது. ஆனால் தோஷம் இல்லாதவர்கள் காலப் போக்கில் தாம்பத்தியத்தில் இருந்து விலகுவர். தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும்.

சூசகமாகக் கூற வேண்டுமென்றால் ஒருவர் விரும்ப, ஒருவர் அதற்கு மறுப்பு தெரிவிப்பார். ஒருகட்டத்தில் உங்களுக்கு தேவைப்பட்டால்/விருப்பமிருந்தால் வேறு எங்காவது சென்று கொள்ளுங்கள் என்று விளையாட்டாக கூறினாலும், அதை தனக்கு கிடைத்த அனுமதியாகக் கருதி வேறு துணையை தேடுவார்.

செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. தாம்பத்திய, காம வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

செவ்வாய் என்பது ஒரு ஆண் கிரகமாகும். வீரம், ஆண்மை, கம்பீரம் வீரியம், இரத்தம், உணர்ச்சியை தூண்டுதல் ஆகியவற்றின் காரக கிரகமாகும். சுக்கிரன் என்பது பெண் கிரகமாகும்.

அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் தாம்பத்ய நிலையறிய அறிவியலின் காரகனான செவ்வாயை கொண்டு அறியப்பட்டது. ஆனால் தற்போது அரை மணி நேரம் முன்பு யாருடன் சேர்ந்து இருந்தார்கள் என அறியுமளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. இதற்கும் செவ்வாயே காரகனாகும். எனவே கால தேச வர்தமானத்தை உணர்ந்து செவ்வாய் தோஷம் என்பது தேவையா என சிந்திக்க வேண்டும். எனவே செவ்வாய் தோஷம் என்றாலே வாசகர்கள் - ஜாதகம் பார்க்க வரும் அன்பர்களை பயமுறுத்தி விட வேண்டாம். இன்றைய நடைமுறையில் , பாதிக்கும் மேல் , செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தான் அதிகம். திருமண தாமதத்திற்கு , செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது.