Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் மதுக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை  May 13, 17
 
பொன்னமராவதி வலம்புரி டாக்கீஸ் சாலையில், மின்வாரிய அலுவலகம், பால்பண்ணை அருகே அரசு மதுபானக்கடை உள்ளது. இக்கடையை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. இதனால் பெண்கள் அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது.

இக்கடையின் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேரூராட்சியின் சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியின் அருகே குடிமகன்கள் அமர்ந்து மது அருந்துவதால் பெண்கள் குடிதண்ணீர் தொட்டியை பயன்படுத்த முடியவில்லை எனக்கூறப்படுகிறது. இக்கடையை அகற்றக்கோரி குடியிருப்புவாசிகளின் சார்பில் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே நேற்று பெண்கள், இளைஞர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் அரசு மதுபானக்கடையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் கோபாலசந்திரன், காவல் ஆய்வாளர் கார்த்திகைசாமி, உதவி ஆய்வாளர் குணசேகரன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயபாரதி ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் காவல்துணை கண்காணிப்பாளர் கோபாலசந்திரன் டாஸ்மார்க் மேலாளருடன் தொடர்பு கொண்டு பேசியதில் விரைவில் இக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.