Nagaratharonline.com
 
NEWS REPORT: மியான்மர் ஆளும்கட்சித் தலைவருடன் செட்டிநாட்டுக் குழுவினர் சந்திப்பு: மீண்டும் வணிகம் செய்ய  Feb 11, 17
 
மியான்மர் நாட்டில் மீண்டும் வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என செட்டிநாட்டுக்குழுவினர் அந்நாட்டின் ஆளுங்கட்சித் தலைவரை சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

19 ஆம் நூற்றாண்டில் செட்டிநாட்டிலிருந்து அன்றைய பர்மா (இன்று மியான்மர்) நாட்டில் வணிகம் செய்ய பலர் குடியேறினர். 1923 ஆம் ஆண்டில் அங்கு சுமார் 150 ஊர்களில் லேவாதேவி தொழிலில் ஈடுபட்டனர். பின்னர் உலகப்போர் மூண்ட காரணத்தாலும், அரசியல் காரணங்களினாலும் நிலம், கட்டடம், கோயில், தோட்டங்களை இழந்த நிலையில் உயிர் தப்பி தாயகம் திரும்பிவிட்டனர். அதன் பின்னர் அந்நாட்டிற்குச் செல்ல முடியாமல் பல்வேறு தடைகள் இருந்துவந்தது.

இந்நிலையில், தற்போது மியான்மரில் ஜனநாயக ஆட்சி ஏற்பட்டுள்ளதால் அங்கு செல்வது என செட்டிநாட்டு பகுதியைச்சேர்ந்த பர்மிய முதலீட்டாளர் குழுவினர் மியான்மர் சென்று அந்நாட்டு ஆளும்கட்சித் தலைவரை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதுகுறித்து அக்குழுவின் தலைவரும் பேராசிரியருமான ஆறு. அழகப்பன் தெரிவித்ததாவது:
மியான்மர் நாட்டின் உயர்நிலைக் காப்பாளரும், முப்படையின் முன்னாள் தளபதியுமான 93 வயதான ஊடின் ஊ-வை கடந்த ஜனவரி 25-ந்தேதி சந்தித்தோம். அவரிடம் மனு ஒன்று கொடுத்துள்ளோம். அதில், செட்டிநாடு நகரத்தார்கள் மீண்டும் மியான்மர் நாட்டிற்கு வந்து பழைய காலங்களில் ஆற்றிய பணிகளையும், தொண்டுகளையும் மீண்டும் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும்.
பர்மாவை தாய்நாடாகக் கருதி பர்மாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட நகரத்தார் சமூகத்தின் பன்முக ஆற்றல்களை மீண்டும் இந்நாடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு உதவவேண்டும் என்று தெரிவித்திருந்தோம். அதனை படித்த ஆளுங்கட்சித்தலைவர் ஊ டின் ஊ ஆவன செய்வதாக தெரிவித்தார். இந்த மனுவை கட்சியின் தலைவரும் மாநில குழு உறுப்பினருமான டோ சுவன் சுஹிக்-கும் மியான்மர் குடியரசுத்தலைவர் ஊ டின் ஜோவுக்கும் அனுப்பிவைப்பதாக அவர் தெரிவித்தார் என்றார்.