Nagaratharonline.com
 
வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை: எம்எல்ஏ  Dec 19, 16
 
பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ரகுபதி.
பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை, நியாயவிலைக் கடைகளை திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ரகுபதி திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரசு பாப்பாயி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். மேலும், மருந்துக்கூடம், ரத்த பரிசோதனைப் பிரிவு போன்றவற்றை பார்வையிட்ட எம்எல்ஏ பிறகு கூறியது:
பொன்னமராவதி வட்ட அளவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை வலையபட்டி பாப்பாயி அரசு மருத்துவமனை. இதை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. ஆனால், தமிழக அரசால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி வேறு, வலையபட்டி வேறு என்ற தவறான புரிதலால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. ஆனால், வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை போதிய இடவசதி கொண்டுள்ளது. அதோடு, இம்மருத்துவமனையைச் சுற்றியுள்ள 7 காவல் நிலையங்களுக்கு பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவமனையாகவும் உள்ளது.
எனவே, தவறுதலான இந்த அறிவிப்பை திருத்த மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரிடம் முறையிட்டு, வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.