Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டி ஊரணியை சுத்தம் செய்யக் கோரிக்கை  Dec 16, 16
 
கீழச்சிவல்பட்டியில் துர்நாற்றம் வீசும் சந்தைப்பேட்டை ஊரணியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழச்சிவல்பட்டியின் மையப் பகுதியாக கருதப்படும் ஆதிகாலத்து பிள்ளையார் கோயில் அருகே சந்தைப்பேட்டை ஊரணி உள்ளது. குளிக்கவும் துணி துவைக்கவும் இந்த ஊரணியை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வூரணி பகுதியில் திருவிழா காலங்களில் வாழை மரம் நடுதல், அம்பு விடுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

இந்த ஊரணியில் தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பாசி படர்ந்துள்ளது. இருப்பினும் ஊரணியின் ஒரு பகுதியில் மக்கள் குளிக்கின்றனர். உடமைகளை துவைத்தும் செல்கின்றனர். இவ்வாறு ஊரணி நீரை பயன்படுத்துபவர்கள் பாசி காரணமாக உடலில் அரிப்பு ஏற்பட்டு அல்லல்படுகின்றனர். ஊரணியில் பழைய துணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் கலந்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஊரணியில் படர்ந்துள்ள பாசி மற்றும் கழிவுப் பொருள்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரணியைச் சுற்றிலும் நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படுகின்றன. அதே திட்டத்தின் மூலம் ஊரணியை தூய்மைப்படுத்த ஊராட்சி ஒன்றியத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.