Nagaratharonline.com
 
குழந்தைகள் கல்விக்காக காரைக்குடியில் குடியேறும் வெளியூர்வாசிகள்: வீட்டு வாடகை உயர்வு  Oct 21, 16
 
காரைக்குடியில் கல்வி நிறுவனங்கள் நிறைந்துள்ளதால் அருகிலுள்ள ஊர்களிலிருந்து தங்களின் குழந்தைகள் படிப்பிற்காக மக்கள் காரைக்குயில் குடியேறிவருகின்றனர். அதே சமயம் காரைக்குடியில் அதிகளவில் தரகர்களும் உருவாகியுள்ளனர். இவர்கள் மூலமே வீடு, கடைகளின் வாடகை உயர்வு ஏற்படுகிறது.

சிலர் பணத்தைப்பற்றி கவலைப்படாமல், பொருள்களின் விலைவாசி உயர்வைப் பற்றி சிந்திப்பதில்லை. இதனால் தான் காரைக்குடி ஒரு தொழில் மையமாகவும், சந்தைத் திடலாகவும் மாறி வருகிறது என்று சமூக ஆர்வலர் எஸ். செல்வம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: காரைக்குடியில் ஒருவர் குடும்பம் நடத்த வேண்டுமென்றால் மாதம் சுமார் ரூ 20,000-த்திற்கு மேல் தேவைப்படுகிறது. மற்ற ஊர்களில் ரூ.10,000 இருந்தால் போதுமானது, ஏனெனில் காரைக்குடியில் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.500, கோழி ரூ. 150, மீன் ஒரு கிலோ ரூ. 200 முதல் 400 வரை என விலைவாசி உயர்ந்து உள்ளது. வீட்டு வாடகை ரூ. 6,000 முதல் 10 ஆயிரம் வரை உள்ளது.

பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்த ஒரு நாளுக்கு ரூ. 10 வசூலிக்கின்றனர். இப்படி காரைக்குடியில் பல்வேறு வழிகளில் நாளுக்கு நாள் விலைவாசி கடுமையாக உயர்ந்துவருகிறது. ஆட்டோ வாடகைக் கட்டணம் அதிகமாகவே வசூலிக்கின்றனர். அதாவது காரைக்குடி முதல் சிவகங்கை சென்று திரும்புவதற்கு பேருந்துக் கட்டணம் ரூ. 70 தான். ஆனால், காரைக்குடி பேருந்து நிலையம், ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு, சுப்பிரமணியபுரம் வரை செல்வதற்கு ஆட்டோ வாடகை ரூ. 70 வாங்குகின்றனர். சென்னையில் கூட குறைந்த கட்டணமாக
2 கிலோ மீட்டர் வரை ரூ. 40 தான் வசூலிக்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு வழிகளில் தன்னிச்சையாக நாளுக்கு நாள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.