Nagaratharonline.com
 
NEWS REPORT: பட்டினத்தார் திருவிழா  Aug 22, 16
 
பட்டினத்தார் திருவிழா காவிரிப்பூம்பட்டினத்தில் 07/08/2016 துவங்கி 18/08/2016 நிறைவு பெற்றது.

சிவநேசர்செட்டியார் - ஞானகலை ஆச்சி தம்பதியருக்கு மகனாக நம் இனத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணிகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் திருவெண்காடர் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை, எடைக்கு எடை பொன் கொடுத்து திருவெண்காடர் பெற்று, அவனுக்கு மருதவாணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் செய்து வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.

தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார்,

10 நாட்கள் திருவிழாவை, கண்டனுர் மகாதேவ இல்லம் நா.அரு.கா.அரு குடும்பத்தார் செய்து வருகிறார்கள் . பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றை ஆ. முத்துப்பட்டினம் பெரி முருகப்பன். கதையாக சொல்லி வருகிறார் .

நகரத்தார் பெருமக்கள் கலந்துகொண்டு பட்டினத்தார் அருள் பெற்றனர் !