Nagaratharonline.com
 
வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தார் குழந்தைகள் பாரம்பரிய சுற்றுப்பயணம்  Aug 18, 16
 
துபை, லண்டனில் வசித்துவரும் நகரத்தார் குழந்தைகள் செட்டிநாடு பாரம்பரியத்தை அறிந்துகொள்ள சுற்றுப்பயணம் செய்துவருகின்றனர்.

செட்டிநாடுப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட நகரத்தார்களின் குழந்தைகள் அந்நாடுகளில் கல்வி கற்று வருகின்றனர். துபையிலிருந்து 19 பேர், லண்டனிலிருந்து 6 பேர் என 25 மாணவ, மாணவியர் சுற்றுலாவாக வந்துள்ளனர். அவர்களுக்கு செட்டிநாட்டின் பாரம்பரியம், பண்பாடு, பழக்க வழக்கங்களை அறியும் வகையில் இடங்களைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்கள் சோழவரத்தில் தங்கி பகலில் சுற்றுப் பயணம் செய்து காலை, மாலை நேரங்களில் கலந்துரையாடலில் பங்குபெறுகின்றனர். கோவிலூர் மடாலயத்திற்கு புதன்கிழமை வந்த மாணவ, மாணவியர் கலாஷேத்திரா பப்ளி கேஷன்ஸ் தயாரித்த பழனி பாதயாத்திரை மற்றும் பட்டினத்தார் குறும்படங்கள் போன்றவைகளைப் பார்வையிட்டனர். கோவிலூர் மடாலய மக்கள் தொடர்பு அலுவலர் சே. குமரப்பன் செட்டிநாடு பாரம்பரியம் குறித்து அவர்களிடம் விளக்கிக்கூறினார். இச்சுற்றுலாவை ஏற்பாடுசெய்து அழைத்துவந்த சோழவரத்தைச்சேர்ந்த ரமேஷ் ராமநாதன் கூறுகையில், நகரத்தார் பழக்க வழக்கம், பாரம்பரியம் அறிந்து அதனை பின்பற்றவும், முன்னோர்கள் கடல் கடந்து வணிகம் செய்தது போல் தொழில் முனைவோராக இவர்கள் ஆவதற்கு ஊக்கம் தருவதற்கும் இச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மாணவ, மாணவியர்கள் கொத்தமங்கலம் உள்ளிட்ட செட்டிநாடுப் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள செட்டிநாடு வீடுகளை பார்வையிட்டனர்.