Nagaratharonline.com
 
சிவ ஆலய அன்னாபிஷேக தரிசனம்  Oct 28, 15
 
பசி என்பது ஒரு பிணி' என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்ற பழமொழியும் பிரசித்தம். வயிறு பசிக்கும் போது அதற்கு உணவு கொடுக்கவேண்டும். பசியின்றி அனைவருக்கும் உணவு அளிக்கும் இறைவனை அன்னத்தால் அர்ச்சனை செய்வதைக் காண கண் கோடி வேண்டும் அல்லவா? ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று இந்த நிகழ்வினை காணலாம். அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்குக் கஷ்டப்பட மாட்டார்கள் என்பது நம்பிக்கை.

சிலருக்கு உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் உண்ண முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்' என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும் என்பது உண்மை.


நேற்று ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு.
தஞ்சாவூரில் உள்ள பிரகதீஷ்வரர் ஆலயத்தில் ஆயிரம் கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட சாதத்தைக் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. காரட், பீட்ரூட், பழங்கள், காய்கறிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது,

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் காலை 8 மணி முதல் 2, 500 கிலோ பச்சரிசியால் சாதம் சமைக்கத் தொடங்கப்பட்டது. பதிமூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, அரிசி அன்னமாக படைக்கப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது.