Nagaratharonline.com
 
NEWS REPORT: பிட்டுக்கு மண் சுமந்து அருள்பாலித்த சுந்தரேசுவரர்  Aug 30, 15
 
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில், சுவாமி பிட்டுக்கு மண் சுமந்த லீலை புதன்கிழமை நடைபெற்றது.
சிவபக்தையான பிட்டு விற்கும் வந்தியக் கிழவிக்கு பதிலாக சிவபெருமானே கூலி ஆளாக வந்து பிட்டுக்காக மண் சுமந்தார் என்றும், அவரது பணியில் குறை கண்ட மன்னர் பிரம்பால் அவரை அடித்தபோது அந்த அடி அனைத்து ஜீவராசிகள் மீதும் பட்டது என்றும், இதையடுத்து சிவபெருமான் மன்னருக்கும், மாணிக்கவாசகருக்கும் அருள்பாலித்தார் என்பதும் புராணம்.
இந்த லீலையை நினைவுபடுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி, அம்மன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, திருவாதவூர் மாணிக்கவாசகர் ஆகியோர் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகினர். சித்திரை வீதி, கீழமாசி வீதி, யானைக்கல், சிம்மக்கல், பேச்சியம்மன் கோயில் வழியாக மேப்பொன்னகரம் பகுதி வைகை கரையிலுள்ள ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு சுவாமிக்கு தலையில் தங்கக் கூடை சார்த்தப்பட்டது. அவரது முன் தங்க மண்வெட்டி வைக்கப்பட்டது. சுவாமியாக திருப்பரங்குன்றம் ராஜா பட்டரும், மன்னராக ஆகாஷ் பட்டரும் வேடமிட்டிருந்தனர். மாலை 3.20 முதல் 3.41 வரை பிட்டுத் திருவிழா பூஜைகள் நடைபெற்றன.

தங்க மண் வெட்டியில் மண் அள்ளி ராஜா பட்டர் சுமந்து வந்து சுந்தரேசுவரர் தலையில் இருந்த தங்கக் கூடையில் நிரப்பினார். பின்னர் உறங்குவதுபோல ராஜா பட்டர் படுத்திருக்க, மன்னர் வேடமிட்ட ஆகாஷ் பட்டர் பிரம்பால் அடிப்பது போல நிகழ்த்திக் காட்டப்பட்டது. பூஜைக்குப் பின் பக்தர்களுக்கு பிட்டு பிரசாதகமாக வழங்கப்பட்டது. பிட்டுத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி செல்லும் வழியெங்கும் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.