Nagaratharonline.com
 
பொன்னமராவதியிலிருந்து வேகுப்பட்டி சாலை பழுதுபார்க்கும் பணியை தடுத்து நிறுத்திய மக்கள்  Aug 6, 15
 
பொன்னமராவதியிலிருந்து வேகுப்பட்டிக்கு புதிய சாலை அமைக்கக் கோரி, வியாழக்கிழமை நடைபெறவிருந்த பழுதுபார்க்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

பொன்னமராவதியிலிருந்து வேகுப்பட்டி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றர். மேலும், இந்த வழியாக வந்த பேருந்துகளும் சாலை சேதமடைந்து காணப்படுவதால் சரிவர வருவதில்லை.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என பல மாதங்களாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், இந்தச் சாலையை பழுதுபார்க்கும் பணிக்காக வியாழக்கிழமை பணியாளர்கள் வந்தனர். ஆனால், அங்கு கூடிய வேகுப்பட்டி, காட்டுப்பட்டி, பி.உசிலம்பட்டி ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை பழுது பார்க்கும் பணியை தடுத்தி நிறுத்தி, புதிய சாலை அமைக்க வலியுறுத்தினர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் செந்தில்குமார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, வட்டாட்சியர் எஸ். கண்ணா கருப்பையாவும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எனினும், அதில் உடன்படாத மக்கள் புதிய சாலை அமைக்காவிட்டால், 3 ஊராட்சி பொதுமக்களும் இணைந்து விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.