Nagaratharonline.com
 
NEWS REPORT: திருப்பதி லட்டுக்கு 300 வயது.  Aug 6, 15
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டுவுக்கு தற்போது 300 வயதாகிறது.

திருப்பதி திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில், திருப்பதி லட்டு முதல் முறையாக 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதிதான் பிரசாதமாக வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் பயணம், ஏழுமலையானை தரிசித்து விட்டு வருவதோடு, திருப்பதி லட்டு இல்லாமல் பூர்த்தியடையாது என்றேக் கூறலாம்.

மாவு, சர்க்கரை, நெய், எண்ணெய், உலர் பழங்கள், ஏலக்காய் சேர்த்து செய்யப்படும் இந்த லட்டு ஒவ்வொன்றும் 300 கிராம் எடையிருக்கும். இதனை செய்ய ரூ.25 செலவானாலும், ஒரு லட்டு ரூ.10க்குத்தான் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும், 2014-15ம் நிதியாண்டில் லட்டு விற்பனை மூலம் ரூ.2,401 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டுக்களை தயாரிக்கும் பணியில் 270 சமையல் பணியாளர்கள் உட்பட 620 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

திருப்பதி லட்டு என்ற பெயரில் சிறிய இனிப்பகங்களில் இனிப்புகளை விற்பனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி லட்டுக்கள் அனைத்தும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு ஏழுமலையான் பாதங்களில் வைக்கப்படுவதாக திருப்பதி கோயில் நிர்வாகம் கூறுகிறது.