Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பை நகர சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகேஸ்வர பூஜை  Jul 30, 15
 
 
நெற்குப்பை நகர சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பாக மகேஸ்வர பூஜை 30/07/2015 அன்று நடைபெற்றது.

நகரத்தார்களுக்கு பாத்தியப்பட்ட நெற்குப்பை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மகேஷ்வர பூஜை 5 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, புதன்கிழமை காலை 7 மணிக்கு அன்னக்கொடி கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு மகேஷ்வர பூஜைக்கு வேல் எடுத்து வைத்தல் நடைபெற்றது. மகேஸ்வர பூசைக்கு முதல் நாள் விநாயகப்பானை வைப்பதற்கு நகரத்தாரில் இரணிக்கோவிலைச் சேர்ந்த வயதில் மூத்தவரான திரு. ப. சொக்கலிங்கம் செட்டியார் அவர்களை முரு. பழ -,இடிதாங்கி வீட்டிலிருந்து அழைத்து வந்து மாலை 5 மணி அளவில் விநாயகப்பானை வைக்க, நகரத்தார் பெருமக்கள் கண்டு, முருகன் அருள் பெற்றனர் . பிறகு,விநாயகப்பானை ரூபாய் 1,11,111/- க்கு ஏலம் விடப்பட்டது .


பின்னர், மூலவரான முருகப் பெருமானுக்கு சிறப்புத் தீபாராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை மகேஸ்வர பூஜையையொட்டி, காலை பட்டு வஸ்திரத்தில் வேலுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

பின்னர், காலை 10 மணியளவில் வேலுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, மகேஷ்வர பூஜை நடத்தப்பட்டது.

இவ்விழாவின்போது, மூலவர் முருகப் பெருமான் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பெண்கள் பொங்கல் வைத்து வேலுக்கு படைத்தனர். பின்னர், அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவியான தேச மங்கையற்கரசியின் சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது