Nagaratharonline.com
 
NEWS REPORT: சமையல் எரிவாயு உருளை முன்பதிவு செய்யும்போது ஜீரோ அழுத்தினால் மானியம் ரத்து  Jul 19, 15
 
வழக்கமாக பதிவு தொலைபேசி சேவை இணைப்பு கிடைத்தவுடன் கியாஸ் முன்பதிவு செய்ய எண்.1–ஐ அழுத்தவும் என்ற தகவல் முதலில் வரும். நாம் எண்.1ஐ அழுத்தினால் எரிவாயு பதிவு எண் சொல்லப்பட்டு நமது செல்லிடப்பேசிக்கு அந்த எண் எஸ்.எம்.எஸ். மூலம் வரும். அதன் பிறகு சில நாட்களில் நமது வீட்டுக்கு எரிவாயு உருளை அனுப்பப்படும். எரிவாயு உருளை விநியோகம் செய்யப்பட்டதும் அதற்கான மானியத் தொகை நமது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இந்த நிலையில் வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனால் ஏராளமானோர் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களிடம் மானியம் வேண்டாம் என்று கடிதம் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுப்பவர்களுக்கு வசதியாக முன் பதிவு செய்யும் போதே மானியத்தை ரத்து செய்வதற்கான நடைமுறையை எண்ணை நிறுவனங்கள் அமுல்படுத்தி வருகின்றன.

அதன்படி செல்லிடப்பேசிலோ அல்லது தொலைப்பேசியிலோ எரிவாயு உருளைக்கான முன்பதிவு செய்யும்போது ஜீரோ பட்டனை அழுத்தினால் மானியம் ரத்தாகி விடும்.

முன்பெல்லாம் எரிவாயு உருளை முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்ய எண்.1ஐ அழுத்துங்கள் என்ற தகவல் முதலில் வரும். அதன்படி வாடிக்கையாளர்களும் செளவுகரியமாக எண்.1ஐ அழுத்தி எரிவாயு உருளை முன்பதிவு செய்தார்கள். ஆனால் தற்போது முன்பதிவு செய்யும்போது முதலில், மானியத்தை விட்டுக் கொடுக்க ஜீரோவை அழுத்தவும் என்று வருகிறது. அதன் பிறகுதான் சிலிண்டர் முன்பதிவுக்கு எண்.1ஐ அழுத்தவும் என்று வருகிறது.

இதன் மூலம் நாம் அவசரப்பட்டு தவறுதலாக ஜீரோவை அழுத்தி விட்டால் நமது மானியம் ரத்தாகி விடும். இந்த நடைமுறையை பற்றி தெரியாதவர்கள் மற்றும் தொலைபேசி பயன்பாட்டை பற்றி முழுமையாக அறியாத பொதுமக்கள் தவறுதலாக ஜீரோவை அழுத்தினாலும் மானியம் ரத்தாகும் அபாயம் உள்ளது.

ஜீரோவை தவறுதலாக அழுத்திய பிறகு அதை திருத்திக் கொள்ள தொலைபேசியில் வாய்ப்பு இல்லை. பின்னர் மீண்டும் மானியத்தை பெற வேண்டும் என்றால் விநியோகஸ்தர்களைதான் அணுக வேண்டும்.