Nagaratharonline.com
 
ஹெல்மெட் தொடர்பான வழக்குகள்: வாகன ஓட்டிகளை அலைக்கழிக்கும் போக்குவரத்து போலீஸார்  Jul 18, 15
 
தமிழகத்தில் ஹெல்மெட் அணியா மல் சென்று போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள், வழக்கை முடிக்க இயலாமல் 10 நாட்களுக்கும் மேல் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

சைதாப்பேட்டையைச் சேர்ந்த கணேஷ் இதுபற்றி கூறும்போது, “நான் கடந்த 3-ம் தேதி கோட்டூர்புரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்று போலீஸில் சிக்கினேன். இன்றுவரை மொபைல் கோர்ட்டில் அபராதம் கட்ட விடாமல் போலீஸார் என்னை அலைக்கழிக்கிறார்கள். கோட்டூர்புரம், ராஜரத்தினம் ஸ்டேடியம், ஸ்பென்சர் பிளாசா என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு வரச் சொல்கிறார்கள். அங்கு சென்றால், ‘உங்கள் கேஸ் கட்டு வரவில்லை’ என்றோ, ‘உங்கள் கேஸ் இன்று முடியாது. நாளை வாருங்கள்’ என்றோ சொல்லி திருப்பி அனுப்புகிறார்கள். இப்படியே 2 வாரமாக அலைந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கங்காதர பாபு கூறும்போது, “5-ம் தேதி அண்ணா சிலை அருகே என் மீது ஹெல்மெட் வழக்கு போட்டார்கள். அன்றிலிருந்து இன்றுவரை இந்த வழக்குக்காக அலைந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஜ் கூறும்போது, “நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். இந்த வழக்குக்காக 12 நாட்களாக அலைந்து கொண்டிருக்கிறேன். எனது நிறுவனத்தில் இதற்கு மேல் விடுமுறை தர முடியாது எனச் சொல்லி விட்டனர். இனியும் இழுத்தடித்தால் என்ன செய்வது எனத் தெரியவில்லை” என்றார்.

போக்குவரத்து போலீஸ் தரப்பில் இதுகுறித்து கேட்டதற்கு, “மொபைல் கோர்ட் காலை, மதியம் என 2 நேரங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடத்தில் முகாமிட்டு இந்த வழக்குகளுக்கு அபராதம் விதிக்கிறது. ஒரு வழக்குக்கு இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வரை ஆகும். நாளொன்றுக்கு 2 அமர்வுகளில் தலா 150 வழக்குகள் வீதம் சுமார் 300 வழக்குகள் முடிக்கப்படுகிறது. ஆரம்ப நாட்களில் போக்குவரத்து போலீஸ் தரப்பில் போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் இன்னமும் மொபைல் கோர்ட்டால் வழக்கு களை முடிக்க இயலவில்லை. காலப்போக்கில் வழக்குகளின் எண்ணிக்கை குறையும் அப்போது நிலைமை சரியாகிவிடும்” என்றனர்.
++++++++++++++++++++++++++++++

எனவே ஹெல்மெட் அணிந்து செல்வது அவசியம்.

Editor, nagarathargateway.com