Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னையில் 80 சதுர மீட்டர் பரப்புக்கும் குறைவான இடத்தில் வீடு கட்ட அனுமதி  Jul 6, 15
 
சென்னையில் 80 சதுர மீட்டருக்கு குறைவான பரப்பளவில் வீடு கட்ட சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெறலாம் என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து மாமன்றக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாதாரண குடியிருப்புக் கட்டடங்கள் கட்டுவதுக்கு திட்ட அனுமதி வழங்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அதிகாரப் பகிர்வு அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தொடர் கட்டட பகுதியில் அமையாத மனைகளுக்கு குறைந்தபட்ச மனை பரப்பளவாக 80 சதுர மீட்டர் என்று வளர்ச்சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச பரப்பளவுக்கு கீழ் உள்ள மனைகளுக்கு திட்ட அனுமதியை வழங்க சென்னை மாநகராட்சியால் இயலாத நிலை இருந்தது. இதனால், சாதாரண கட்டடங்களுக்கு அனுமதி பெற முடியாத நிலையில் பொதுமக்கள் இருந்தனர்.
அதிகாரப் பகிர்வின்படி குடும்ப பாகப்பிரிவினை, நீதிமன்ற வழக்கின் மூலமாக பிரிக்கப்பட்ட மனைகள், நிரூபிக்கத்தக்க இன்னல்கள் மூலம் உள்பிரிவு செய்யப்பட்ட மனைகளுக்கு குறைந்தபட்ச மனை பரப்பில் 10 சதவீதத்துக்குள் விதிமீறல் இருந்தால் ஒப்புதல் வழங்க வழிவகை செய்யப்பட்டது.
இதுதொடர்பாக துணை ஆணையர் (பணிகள்) தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரையின்படி 80 சதுர மீட்டர் பரப்பளவுக்கு கீழே உள்ள மனைகளுக்கும் திட்ட அனுமதி ஒப்புதலை ஆணையர் வழங்கலாம்.
எனவே, 80 சதுர மீட்டருக்கு குறைவாக உள்ள மனைகளுக்கு திட்ட அனுமதி கோரினால், அதைப் பரிசீலனை செய்து, ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக மண்டல அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என்று மேயர் தெரிவித்தார்.