Nagaratharonline.com
 
NEWS REPORT: காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உற்சவம்  Jun 30, 15
 
காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.

சிவபெருமானால் அம்மேயே என்று அழைக்கப்பட்ட பெருமை மிக்கவர் புனிதவதியார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரானவர் அவர். அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாக உருவானவர். தேவாரத்துக்கு முன்பு திருவந்தாதி படைத்த பெருமைக்குரியவர். காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை விளக்கும் வகையில் காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சார்பில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழா வியாழக்கிழமை ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு (பரமதத்தர்) முதல் தொடங்கியது. சிறப்பு மேள வாத்தியங்கள், குதிரை பூட்டிய மின் அலங்கார ரதத்தில் பரமதத்தர் புறப்பாடு நடைபெற்றது. 2-ம் நாளான செவ்வாய்க்கிழமை அம்மையாரின் திருக்கல்யாண உற்சவம் அம்மையார் மணிமண்டபத்தில் நடைபெற்றது.

திருக்கல்யாணத்திற்கு முன்னதாக காலை திருக்குளக்கரைக்கு புனிதவதியார் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வீதியுலா முடிந்து திருக்கல்யாண இடத்துக்கு பரமதத்தர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

திருக்கல்யாண நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள், திரளான மக்கள் முன்னிலையில் திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜையை சிவாச்சாரியார்கள் செய்தனர். தொடர்ந்து பரமதத்தல் சார்பில் சிவாச்சாரியார் அம்மையார் கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டினார். அப்போது பக்தர்கள் அட்சதையை தூவி அம்மையாரை வழிபட்டனர்.

அம்மையார் திருக்கல்யாண்தை தரிசிப்பது திருமணமாகாதோர், சுமங்கலிப் பெண்களுக்கு மிகுந்த விசேஷமென கருதப்படுவதால், மண்டபம் உள்ளேயும், வெளியேயும் திரளானவர்கள் கலந்துகொண்டனர். திருமாங்கல்யதாரணம் முடிந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருமாங்கல்யதாரணம் முடிந்து சுவாமிகள் இருக்கை மாறி அமரவைக்கப்பட்டது. தொடர்ந்து 16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டது.

திருக்கல்யாண நிகழ்ச்சியை மண்டபத்தின் உள்ளே இருந்தோர் நேரடியாக கண்டனர். வெளியிலும் ஏராளமான மக்கள் இருந்தபடியால், திருக்கல்யாணத்தை தொலைக்காட்சி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருக்கல்யாணத்தில் பெரும்பான்மையாக பெண்களே கலந்துகொண்டனர்.

ஆபரணங்கள் அணிந்து வந்திருந்தமையால், ஏராளமான போலீஸார் பாதுபாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.