Nagaratharonline.com
 
NEWS REPORT: 5 ரூபாய் பயணச்சீட்டு வாங்கி விரைவு ரயில் நடைமேடைக்குச் சென்றால் அபராதம்  Mar 30, 15
 
ரயில் நிலையங்களில் நடைமேடை (பிளாட்பாரம்) டிக்கெட் கட்டணம் ரூ.5-இல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் புதன்கிழமை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது. ர

அதே நேரம், புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய்தான். அது மட்டுமின்றி, நடைமேடை டிக்கெட் எடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும். ஆனால், பயணிகள் ரயில் டிக்கெட் அந்த நாள் முழுக்க செல்லுபடியாகும். புறநகர் ரயில் டிக்கெட் ஒரு மணி நேரம் வரை செல்லுபடியாகும்.

விரைவு ரயில்கள், மெயில் ரயில்களில் தங்களது உறவினர்கள், நண்பர்களை வழியனுப்பச் செல்பவர்கள் 10 ரூபாய் நடைமேடை டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக பாசஞ்சர் ரயில் அல்லது புறநகர் ரயிலுக்குரிய குறைந்தபட்ச கட்டணமான 5 ரூபாய் டிக்கெட் எடுத்து விரைவு ரயில் நடைமேடைகளுக்கு வரும் நிலை உள்ளது.

அதன்படி, ரூ.5 டிக்கெட் எடுத்தவர்கள் விரைவு ரயில் நடைமேடைகளில் நடமாடினால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் ரயில், விரைவு ரயில் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அந்த ரயில்கள் வரும் இடத்துக்கு மட்டும் செல்லவேண்டும். புறநகர் ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அந்தப் பகுதிக்கு மட்டும் போய் வர வேண்டும். பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் ரூ.10-க்கான நடைமேடை டிக்கெட் எடுக்க வேண்டும். ரூ.5 கட்டணம் கொண்ட பயணச் சீட்டை எடுத்துவிட்டு சம்பந்தமில்லாத நடைமேடைகளில் நடமாடுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.