Nagaratharonline.com
 
NEWS REPORT: காரைக்குடியில் ஏப்.1-இல் கம்பன் விழா தொடக்கம்  Mar 26, 15
 
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் 77-ஆம் ஆண்டு கம்பன் விழா ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி கம்பன் கழகச் செயலாளர் பழ. பழனியப்பன் திங்கள்கிழமை கூறியதாவது: 77-ஆம் ஆண்டுக் கம்பன் திருநாள் வரும் ஏப்ரல் 1 முதல் 3 வரை காரைக்குடி கம்பன் மணிமண்டபத்திலும், ஏப்ரல் 4-ஆம் தேதி நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் அருள்கோயிலிலும் கொண்டாடப்படுகிறது.

முதல்நாள் விழாவில் தமிழுக்காகவும், திருவள்ளுவருக்காகவும் முதல்முதலில் குரல் கொடுத்த வடபுலத்தாரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தருண் விஜய் கௌரவிக்கப்படுகிறார்.

இவர் அண்மையில் குமரி முனையிலிருந்து சென்னைக்கு திருவள்ளுவர் நடைப்பயணம் மேற்கொண்டு திருக்குறளைப்பற்றி ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் நூல் எழுதியதோடு, திருவள்ளுவர் திருவுருவச்சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவ அவர் மேற்கொண்டிருக்கும் முயற்சியைப் பாராட்டி அருந்தமிழ் ஆர்வலர் என்ற விருதினை சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் வழங்கி கௌரவிக்கிறார்.

முதல் நாள் மாலை கம்பன் திருநாளை தருண் விஜய் எம்.பி. தொடக்கிவைத்துப் பேசுகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பி ரமணியன் தலைமை வகிக்கிறார். கம்பன் அடிசூடி வரவேற்கிறார்.

2-ஆம் நாள் மாலை சட்டபேரவை உறுப்பினர் பழ. கருப்பையா ராமன் என்றோர் அரசியல் அறிஞன் என்ற தலைப்பில் பேருரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து ராமன் எத்தனை ராமனடி என்ற தலைப்பில் திருநங்கை நர்த்தகி நடராஜ் நாட்டிய நிகழ்ச்சி வழங்குகிறார்.

ஏப். 3-ஆம் தேதி நடைபெறும் பட்டிமன்றத்துக்கு சுகி சிவம் நடுவராக பொறுப்பேற்கிறார். இதில் மூன்று அணிகள் தங்களது வாதங்களை முன்வைக்கின்றனர்.

ஏப்.4-ஆம் தேதி நான்காம் நாள்விழா நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோயிலில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமைவகிக்கிறார். கண. சுந்தர் வரவேற்கிறார்.

யாழ் சு.சந்திரா ராம இறை இயல் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். கம்பன் கழகம் சார்பில் நா. மெய்யப்பன் நன்றி கூற விழா நிறைவுபெறுகிறது என்றார்.