Nagaratharonline.com
 
NEWS REPORT: நூற்றாண்டு கடந்த பாகனேரி நூலகம்'கரையான்கள் பிடியில்' அரிய புத்தகம்:காந்தி தடம் பதித்த மண்ணில்  Feb 26, 15
 
:சென்னை கன்னிமாராவிற்கு அடுத்து 'சிறந்த நுாலக விருது' பெற்ற பழமை வாய்ந்த பாகனேரி நுாலகத்தில் அரிய புத்தகங்கள் 'கரையானுக்கு' இரையாகின்றன.சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் பாகனேரி உள்ளது. மகாத்மா காந்தி, டாக்டர் ராஜேந்திரபிரசாத், காமராஜர், எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை வந்து சென்ற கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் மு.காசிவிஸ்வநாதன் செட்டியார் (1898- -1986) தாம் படித்த புத்தகம் பாகனேரிக்கு பயன்படும் என 1920ல் 1,500 புத்தகத்துடன் 'கருணாகடாட்சி வாசக சாலை'யை துவக்கிய பின் 1934ல் 'திருவள்ளுவர் நுாலகம்' ஆனது.

அரிய புத்தகம்: முதல் இசைத்தமிழ் நுால் 'கருணாமிர்தசாகரம்', கரந்தை தமிழ் சங்க யாழ்புத்தகம், அறிவியல், ஆன்மிகம், மருத்துவம், உளவியல், இலக்கணம், இலக்கிய நுால்கள், உள்ளூர் எழுத்தாளர் முதல் உலக எழுத்தாளரின் அரிய புத்தகம், ஈ.வெ.,ராமசாமியின் புத்தக தொகுப்பு இருந்தன. நுாலக ஆணைக்குழு தலைவராக இருந்த பாகனேரி பிஎல்.பில்லப்பன் காலத்தில், 1975ல் காசிவிஸ்வநாதன் செட்டியார் தானமாக 8 ஆயிரம் புத்தகம், 25 தேக்கு மர கண்ணாடி பீரோ, அரிய புகைப்படத்தை வழங்கி, அரசு நுாலகம் ஆனது.மதகுபட்டி ஜானகி தானம் செய்த 7 சென்ட் இடத்தில் கட்டடத்தில் 40 ஆண்டாக இயங்குகிறது. 1920ல் இருந்து இந்நுாலகம் 195 ஆண்டை கடந்து நிற்கிறது.விருது: சென்னை கன்னிமாராவிற்கு அடுத்து 2வது அரிய நுாலக விருதை 1970ல் அரசு வழங்கியது. தற்போது இந்த அரிய புத்தகங்கள் 'கரையான்களுக்கு' இரையாகி வருகின்றன. கட்டடம் சேதமுற்று 'கதம்ப வண்டு' கூடாரமானதால், வாசகர்கள் அச்சத்தில் உள்ளனர்.பாகனேரி எழுத்தாளர் நவ.சண்முகம்,76,(50ஆண்டு வாசகர்): இங்குள்ள அரிய புத்தகத்தை படித்ததின் மூலம், 'வாசகராக இருந்த நான் எழுத்தாளர்' ஆனேன். ஆராய்ச்சி மாணவர்கள் அரிய புத்தகத்தை ஆய்வுக்கு எடுத்து செல்கின்றனர்.

இக்கட்டடம் இடியும் நிலையில் உள்ளதால், 2 ஆயிரம் அரிய புத்தகத்தை சென்னைக்கு எடுத்து சென்றுவிட்டனர். 'சினிமா','டிவி'யால் இளைஞரிடம் வாசிப்பு திறன் குறைந்துவிட்டது. 'வாசிப்பை நேசித்தால் நுாலகத்தின் அருமை புரியும்', என்றார்.நுாலகத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்,“புதிய கட்டடத்திற்கு திட்டம் தயாரித்து பொதுப்பணித்துறையில் ஒப்படைத்து விட்டோம். நிதி ஒதுக்கீடு இன்றி கட்டடம் கட்டும் பணி கிடப்பில் உள்ளது,அரிய புத்தகங்கள் சென்னை இயக்குனரகத்தில் பாதுகாப்பாக உள்ளது,” என்றார்.