Nagaratharonline.com
 
NEWS REPORT: நடப்பது எல்லாம் நன்மைக்கே!  Oct 27, 14
 
பயிற்சிகள் செய்யாத தேகம் பாழ்பட்டுப் போகிறது
உழைக்காத தேகம் உலுத்துப் போகிறது
நடக்காத தேகம் நலிவடைந்து போகிறது.
இதை நாம் அனுமதிக்கலாமா?

நடை பயிற்சியால் நமது உடலில் ரத்த ஓட்டம் சீராகி திசுக்களை மேம்படுத்துகிறது. உடலில் திசு இறுக்கப் பிடிப்பை உருவாக்கும் 'லேக்டிக்' அமிலம் வெளியேற்றப்படுகிறது. சுறுசுறுப்பு அதிகமாவதுடன், நமது மெட்டபாலிசம், உணவு தன் மயமாதல், ஜீரணம் சிறப்படைகிறது.

அதிகாலை 4 முதல் 6 மணி வரை 'ஓசோன்' காற்று மிகுந்துள்ள நேரம். காலையில் நடப்பதால் சூரியஒளி உடலில் பரவி 'டி' வைட்டமின் கிடைக்கும். காலையில் தவறினால் மாலை 5 முதல் இரவு 7 மணி வரை நடக்கலாம்; சாப்பிட்ட பின் நடக்கக்கூடாது.

எண் 'எட்டினை' தரையில் வரைந்து அதன் மீது நடந்திடுங்கள். அகலம் 6 முதல் 8 அடிகள் இருக்கலாம். நீளம் 12 முதல் 16 அடி வரை இருக்கலாம். மிக அதிகமான நீள அகலத்தில் 8 போட வேண்டாம். நடக்கும்போது உடம்பை விரைப்பாக வைக்காமல் இலகுவாக வைத்தபடி நடந்திடுங்கள்.'நான்கு' நடை என்பது நமது கால் பாதத்தை நான்கு பிரிவுகளாக்கி, அப்பகுதியில் மட்டுமே ஒரே நேரத்தில் தரையில் படும்படி நடப்பது. கால் விரல்கள், முன்பாதம் தரையில் படியுமாறு 20 அடி துாரம் நடக்கலாம். குதிகால் தரையில் படாமல் நடக்க வேண்டும். பின்பாதம் தரையில் படும்படி 10 அடி முதல் 20 அடி துாரம் வரை நடக்கலாம். இதில் முன் பாத விரல்கள் தரையில் படாது. இருபாதத்தின் வெளிபக்க ஓரங்கள் மட்டும் தரையில்படும்படி தரையில் கவனமாக 10 முதல் 20 அடி துாரம் வரை நடக்கலாம். நிறைவாக முழங்காலை உட்புறமாக பாதங்களை அகற்றி உள்பாதம் ஓரம் தரையில் படும்படியாக நடந்து பழகலாம்.

நடை பயிற்சிக்கு முன் காபி, டீ குடிக்கக்கூடாது. தண்ணீர் 3 டம்ளர் அருந்தலாம்.

ஆடும் போது மயில் அழகு
ஓடும்போது மான் அழகு
தாவும் போது முயல் அழகு
கூவும்போது குயில் அழகு
மேயும் போது பசு அழகு
பாயும்போது புலி அழகு
நடக்கும்போது தான் மனிதன் அழகு.

by முனைவர் இளசை சுந்தரம்.