Nagaratharonline.com
 
NEWS REPORT: காரைக்குடியில் அரசு விரைவு பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்டோடு நின்று விடுவதால், பயணிகள் பரிதவிப்பு  Oct 19, 14
 
காரைக்குடியில் அரசு விரைவு பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்டோடு நின்று விடுவதால், நீண்ட தூரத்தில் இருந்து வரும் பயணிகள் பரிதவிக்கின்றனர்.

காரைக்குடியில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், சென்னை, பெங்களூரு செல்லும் ஆம்னி பஸ்கள் அனைத்தும், புது பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்பி செல்கின்றன. வெளியூரிலிருந்து வரும் பஸ்களும் புது பஸ் ஸ்டாண்ட் வருகிறது. ஆனால், அரசு விரைவு பஸ்கள் மட்டும், பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்புகிறது. திரும்பி வரும்போதும் பழைய பஸ் ஸ்டாண்டிலேயே நின்று விடுகிறது. இதற்கான முன் பதிவு மையமும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலேயே உள்ளது. நள்ளிரவு நேரங்களில் கோவை, பெங்களூரு, சென்னையிலிருந்து வரும் பயணிகள், உடமைகளுடன், புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வேறு பஸ் ஏறி வர வேண்டியது உள்ளது. பஸ் ஏறவும் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை செல்ல வேண்டியது உள்ளதால், நெருக்கடியில் பலர் பஸ்சை தவற விட்டு விடுகின்றனர்.

காரைக்குடி செக்காலை சொக்கலிங்கம் கூறும்போது: பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து சென்னைக்கு 6 பஸ்களும், பெங்களூருக்கு ஒரு பஸ்சும், கோவைக்கு 2 பஸ்களும் இயக்கப்படுகின்றன. கோவையிலிருந்து வரும் பயணிகளை பழைய பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடுகின்றனர். சென்னைக்கு அரசு பஸ்சில் பயணிக்க வேண்டும் என்றால், பழைய பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல வேண்டியதுள்ளது. குடும்பத்துடன் செல்பவர்கள், அரசு பஸ்சில் செல்ல முடியாமல், தனியார் ஆம்னி பஸ்களை நாட வேண்டியது உள்ளது. எனவே பயணிகளின் சிரமத்தை தவிர்க்கும் வகையிலும், அரசுக்கு வருவாய் இழப்பை தவிர்க்கும் வகையிலும், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.