Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்  Aug 28, 14
 
பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சதுர்த்தி பெருவிழாவையொட்டி 9 ஆம் திருநாள் விழாவாக தேரோட்டம் நடைபெற்றது.

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா நடைபெற்று வருகிறது. காலை மூஷிக வாகனத்தில் வெள்ளி கேடகத்தில் சாமி திருவீதி உலாவும், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்று வந்தன. வியாழக்கிழமை (ஆக.28) திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, காலையில் சுவாமி திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 4.15 மணிக்கு பிச்சைக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, தீபாராதனை நடைபெற்று, திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

இரண்டு தேர்கள் உள்ள இத் தலத்தில் உற்சவர் ஒரு தேரிலும், சண்டிகேஸ்வரர் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். சண்டிகேஸ்வரர் தேரினை பெண்கள் மட்டுமே இழுத்தனர். இத் தேர்கள் 6.10 மணியளவில் நிலைக்கு வந்தன.

சதுர்த்தி தேரோட்டத்தை முன்னிட்டு மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இத் தேரோட்ட விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாலை நிகழ்ச்சிகளாக அழகம்மை அருணாசலம் குழுவினரின் பரதநாட்டியமும், ஆன்மிகத்தில் கண்ணதாசன் என்ற தலைப்பில் நா.நாச்சியப்பனின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.

பின்னர், ராஜா ஜெயராஜின் சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. திருவீதி உலாவின்போது துரை.பாரதிதாசன், தங்கமணி, மற்றும் கே.ஜி.கல்யாணசுந்தரம், வி.எம்.கணபதி குழுவினரின் நாகஸ்வர இன்னிசையும் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (ஆக.29) பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி விழா நடைபெற உள்ளது. காலை கோயில் எதிரே உள்ள திருக்குளத்தில் நடைபெற உள்ள தீர்த்தவாரி உற்சவத்தில் அங்குசத் தேவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெறும். பகல் 12 மணியளவில் ராட்சதக் கொழுக்கட்டை விநாயகருக்குப் படைக்கப்படும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஈதல் இசைபட வாழ்தல் என்ற தலைப்பில் எம்.குமரப்பன் சிறப்பு சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு எஸ்.ராமநாதன் குழுவினரின் நகைச்சுவைத் திருவிழாவும், இரவு 11.15 மணிக்கு ஐம்பெரும் மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளன.