Nagaratharonline.com
 
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கிழக்கு ராஜகோபுரம் கும்பாபிஷேகம்  Mar 22, 14
 
மதுரையில் கடந்த டிசம்பரில் பெய்த மழையின்போது இடிதாக்கி சேதமடைந்த அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் கிழக்குக் கோபுரக் கலசங்களுக்கு புதன்கிழமை காலை லகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் கிழக்கு ராஜகோபுரம் கி.பி.1216-ஆல் கட்டப்பட்டது. சுமார் 150 அடி உயரமுடைய இக்கோபுரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி இரவில் இடிதாக்கியது. இதில் கோபுரத்தின் வலது பக்க யாழி முழுமையாகச் சேதமடைந்தது.

இதையடுத்து புதன்கிழமை லகுகும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்திற்கு அருகே அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பூஜைகள் தொடங்கின.

9 குண்டங்கள் வைத்து புனிதநீர் பூஜை செய்யப்பட்டது. தங்கம், வெள்ளி கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டன. திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் பூஜைகள் நடந்தன.

புதன்கிழமை காலை பூஜையிலிருந்த 9 புனிதநீர்க் கலசங்களையும் 9 சிவாச்சாரியார்கள் தலையில் வைத்து கோயிலை வலம் வந்தனர்.

பின்னர் கிழக்குக் கோபுரத்தில் ஏறி அங்குள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி காலை 9.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தினர்.