Nagaratharonline.com
 
Chithra Pournami
Start Date:   Apr 23, 24
End Date:   Apr 23, 24
Venue:  
Viewed:   1044   times
 
 
மாதங்களில் முதல் மாதமாக வருவது சித்திரை. அதில் சூரியன் வரும்பொழுது ஆண்டு தொடங்குவதாகப் பஞ்சாங்கம் அறிவிக்கின்றது. அந்தச் சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகின்றார். அந்த மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று சந்திரன் முழுமையடைகின்றார். நவக்கிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெறும் நாள் தான் 'சித்ரா பவுர்ணமி' விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

அப்படிப்பட்ட தித்திக்கும் திருநாள், 26.4.2021 வருகின்றது. இந்த விழாவைக் கொண்டாடுவதன் மூலம் வாழ்வில் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற வழி பிறக்கின்றது.

பொதுவாக மனிதனின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தெய்வ வழிபாடுகளும், விரதங்களும் தான். அந்த விரதங்களில் நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப்பலனை வழங்கும் என்பதை நாம் அனுபவத்தின் வாயிலாகத்தான் உணரமுடியும்.

இது போன்ற சந்திர பலம் பெற்ற நாட்களில் கடல் தண்ணீர் மேல்நோக்கிப் பொங்கி எழும். கடல் அலை சீறிப்பாயும், அலைபாயும் அந்த நாளில் நாம் விரதமிருந்தால் அலைபாயும் மனதில் அமைதி கிடைக்கும். அப்படிப் பட்ட நாட்களில் ஓர் அற்புதமான நாள் தான் சித்ரா பவுர்ணமி ஆகும்.

நாம் செய்த பாவ புண்ணியங்களைப் பதிந்து வைக்கும் சித்ரகுப்தனை வழிபட்டு, கொண்டாடும் விழாவாகவும் இந்தப் பவுர்ணமி அமைகின்றது. நாம் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாக மாற்றவும் செய்யும்படி கும்பிட வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய பாவத்தின் அளவு குறைந்து புண்ணியக் கணக்கின் அளவு கூடும்.

சித்ரகுப்தனுக்கு என்று காஞ்சிபுரத்தில் கோவில் உள்ளது.

அருப்புக்கோட்டையில் தனிச்சன்னிதி உள்ளது. அங்கு செல்ல இயலாதவர்கள் இல்லத்திலேயே நினைத்து விரதமிருந்து சித்ரகுப்தனை வழிபாடு செய்யலாம். அவ்வாறு வழிபடுவதால் ஆயுள் விருத்தியும், ஆதாயமும் கிடைக்கும். செல்வ விருத்தி உருவாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் இந்த சித்ராபவுர்ணமி அன்று பொங்கல் வைத்து மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

அன்றைய தினம் பூஜை அறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து, அருகில் ஒரு வெண்கலச் சட்டியில் மண்ணுடன் தண்ணீர் கலந்து வைத்து அதன் மேல் ஒரு செம்பு வைத்து, அந்தச் செம்பில் முக்கால் அளவிற்கு மேல் தண்ணீர் நிரப்பி வைத்து, மாவிலை, தேங்காய் வைத்து, அதைக் கரகமாக நினைத்து வழிபட வேண்டும். அதன் அருகில் குத்துவிளக்கு ஏற்றிக் கோலமிட வேண்டும். பொங்கல் பொங்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். நவதானியம் பரப்பி வைத்து, வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து 'சித்ரகுப்தன் படியளப்பு' என்று எழுதி வைப்பர்.

சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கி பொங்கல் வைத்து பொங்கல் பொங்கும் பொழுது சித்ரகுப்தனை சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும்.

சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், பச்சரிசிக்கொழுக் கட்டை, இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றையும் இலையில் வைத்து, பலாச்சுளை, நுங்கு, திராட்சை, மாம்பழம், இளநீர், நீர்மோர், மாவிளக்கு போன்றவற்றை வைத்துப் படைக்க வேண்டும். பச்சரிசி சாதத்திற்கு தட்டைப்பயறு மாங்காய் குழம்பு வைப்பது வழக்கம். பருப்பு நெய்யும் வைக்க வேண்டும்.