Nagaratharonline.com
 
annabhishegam
Start Date:   Oct 20, 21
End Date:   Oct 20, 21
Venue:  
Viewed:   929   times
 
 
ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.

“அன்னம் பரப்பிரம்மம்" என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது. பிரசாதத்தை “ப்ர+சாதம்" என சொல்ல வேண்டும். “சாதம்" சாதாரண உணவு; “ப்ர" என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, “பிரசாதம்" ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.

தமிழ்நாட்டில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் பிரசித்தி பெற்றது. அங்குள்ள பெருவுடையாருக்கு நூறு மூடை அரிசி சமைத்து அபிஷேகம் செய்தனர். ஐப்பசி சதயத்தில் தான், ராஜராஜ சோழனுக்கு பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு, இந்த தர்மத்துக்கு அவன் ஏற்பாடு செய்திருக்கலாம். கால வெள்ளத்தில், இது எல்லா சிவாலயங்களுக்கும் பரவியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழனும் தன் தந்தையைப் போன்றே கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரம்மாண்டமான சிவாலயத்தை கட்டியுள்ளான். இங்குள்ள இறைவனுக்கும் பிரகதீஸ்வரர் என்ற நாமத்தையே சூட்டினான். இங்கு சோழர் காலத்தில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம், காலப்போக்கில் மறைந்து போனது. தற்போது, காஞ்சிப்பெரியவர் வழிகாட்டுதலின்படி மீண்டும் அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்ந்தனர். இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொண்டால் உணவுக்கு பஞ்சம் ஏற்படாது என்பது அனைவரின் நம்பிக்கை.