Nagaratharonline.com
 
Nachiyar Kovil Kal Karuda Sevai
Start Date:   Mar 18, 18
End Date:   Mar 18, 18
Venue:   Nachiyar Kovil is located 8 kms from Kumbakonam in Thanjavur District
Viewed:   873   times
 
 
கல் கருடசேவை: இங்கு கருடாழ்வார் தனிச்சன்னதியில் உடலில் 9 நாகங்களுடன் அருளுகிறார். இவருக்கு ஆறுகாலமும் மோதக நைவேத்யம் படைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகிறது என்பது சிறப்பிலும் சிறப்பு. உற்சவ காலங்களில் மரத்தால் அல்லது பிற உலோகங்களால் செய்யப்பட்ட கருடன்தான் வீதியுலா செல்வார். ஆனால், இங்கு கருடசேவையின் போது கற் சிலையாக இருக்கும் மூலவரே வீதியுலா செல்கிறார். இவரை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் நான்கு பேர் இவரை சுமந்து வருவர். பின் அப்படியே 16, 32 எனப்பெருகி இறுதியில் பலர் இவரைச் சுமக்கிறார்கள். இவர் வெளியிலிருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும்போது அதே எண்ணிக்கையில் ஆட்கள் குறைந்து பின் கருவறையில் வைக்கின்றனர். கருடரால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்புவரையில் உச்சிகால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்ய பொருட்களை உண்டு வந்ததாம். அவற்றின் மறைவிற்கு பிறகு பிரகாரத்தில் அதற்கென தனிச்சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

சாவிக்கொத்துடன் தாயார்: ஸ்ரீரங்கம் கோயில், ஆண்டாளால் பெயர் பெற்றிருப்பதுபோல இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாரை மையப்படுத்தியே கருவறையும் அமைக்கப்பட்டிருக்கிறது. பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. வீதியுலா செல்லும் போதும் இவளே முன்பு செல்ல அதற்கு பின்பே சுவாமி எழுந்தருளுகிறார். இவளுக்கே முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.