Nagaratharonline.com
 
Kallalagar crossing Vaigai river function
Start Date:   May 10, 17
End Date:   May 10, 17
Venue:  
Viewed:   14344   times
 
 
அழகர் வைகையில் இறங்கும் வைபவம் இன்றளவும் சிறப்பாக மதுரையில் கொண்டாடப்படுவதற்கு மன்னர் திருமலைநாயக்கரே காரணம் என கூறப்படுகிறது. அவரது ஆட்சி காலத்தில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாண திருவிழா மாசி மாதமும், அழகர்கோவில் திருவிழா சித்திரை மாதமுமே நடைபெற்று வந்துள்ளது.

ஆனால் அதனை சைவமும், வைணமும் இணைந்து கொண்டாடும் வகையில் மாற்றியது அவர்தான் என வரலாறு கூறுகிறது. மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை சித்திரை மாதத்திற்கு மாற்றிய அவர், அதுவரை மதுரை நகருக்கு வராமல் வண்டியூர் சென்று வந்த அழகரை மதுரை வைகைக்கு வரும்படி மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகத்தான் இன்று சித்திரை மாதம் என்றால் மதுரையில் உள்ள உறவினர்களிடம் பேசுவோர் மீனாட்சியின் திருக்கல்யாணம் எப்போது? அழகர் ஆற்றில் இறங்குவது எப்போது? என கேட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காண அழகர்கோவிலில் இருந்து படை பட்டாளங்களோடு புறப்பட்டு வருகிறார் அழகர். ஆனால் அவர் வருவதற்குள் மீனாட்சி–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் முடிந்து விடுகிறது.

இதனை கேள்விப்பட்ட அவர் தங்கையை காணாமல் வைகை ஆற்றில் இறங்கிவிட்டு அப்படியே சென்றுவிடுவதாகவும் சிலர் கூறி வருகின்றனர். இதேபோல் துர்வாச முனிவரால் சாபம் விடுக்கப்பட்ட மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக சுந்தரராஜபெருமாள் மதுரைக்கு எழுந்தருளி கருட வாகனத்தில் அவருக்கு காட்சி கொடுப்பதற்காகவே வைகை ஆற்றில் நீராடினார் என்பதும் ஒரு வரலாறு.