Nagaratharonline.com
» All
» Interview
» Article
Article
     

IBCN 2017 - - அகில உலக நகரத்தார் வணிக மாநாடு 2017 -  அறிமுக விழா! சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது!

நம்பிக்கை அதிர்வுகள் நாற்திசை பரவி நாம் சார்ந்த சமூகம் , மற்றுமொரு நல்ல பயணத்திற்கு அடியெடுத்த முதல் நாள் , நம்மையெல்லாம் பரவசம் கொள்ளச் செய்தது.

ஆம்! அந்த  ' சென்னையில் ஒரு நாள் ' ஏப்ரல் 24, 2016.

2007 ல் மலேசியாவில் வித்திடப்பட்ட நம் சமூக ஒருங்கிணைப்புத் துவக்கத்தை , வணிகம் சார்ந்த நோக்கங்களுக்குத் திசை திருப்பி , வீரியம் இழந்து நிற்கும் நம் சீரிய வணிக ஆற்றலை மீட்டெடுக்கும் முயற்ச்சியில் IBCN2013 சிங்கப்பூர் , IBCN 2015 கோவை என்கிற பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலையாக…..

அமீரக ( UAE) நகரத்தார்களின் NBIG(Nagarathar Business Initiative Group) அமைப்பு , துபாயில் நடத்தவிருக்கும் IBCN2017 மாநாட்டின் அறிமுக விழா , சென்னையில் GRT மாநாட்டு மையத்தில் நடந்தது . அன்று தினம் , ஆதரவுக் கரங்கள் அருகில் வந்து அதிசயக்க வைத்தது, வெளிச்சப் பாதையின் வீச்சு விஸ்தீரணமானது.

2017 ஆம்ஆண்டு ஏப்ரல் 14.,15 மற்றும் 16 தேதிகளில் துபாயில் நடக்கவிருக்கும் IBCN 2017 ன் உயரிய நோக்கங்களையும் , அதற்கான ஏற்பாடுகளையும் நம் சமூகத்தினற்கு அறிமுகம் செய்து , அவர்கள் மாநாட்டில் பேராளர்களாகக் கலந்து கொள்ள பதிவு செய்யத் தொடங்கும் துவக்க நிகழ்வாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

IBCN 2017 ன் துணைத்தலைவர் Dr சிவராமன் வழங்கிய வரவேற்புரையைத் தொடர்ந்து IBCN2015ல் நடைபெற்ற Business Plan Competition ல் வெற்றி பெற்ற தொழில் முனைவர் இளைஞர் கமலக்கண்ணன் முதலில் உரையாற்றியதில் உயரிய இலக்கு நோக்கிப் பயணிக்கும் இம் மாநாடுகள்  நோக்கத்தினின்று விலகிவிடாமல் வெற்றி நிச்சயம் தருகிறது என்பதற்கு தன் தொழில் சாதனைகளை மேற்கோள் காட்டியது கலந்து கொண்ட பேராளர்களைக் கவனம் கொள்ளச் செய்தது.

அடுத்தடுத்த நிகழ்வுகளாக IBCN 2013ன் செயலர் திரு சுப அருணாசலம் ,  IBCN 2015ன் தலைவர் திரு PL K பழனியப்பன் மற்றும் நடக்கவிருக்கும் IBCN 2017ன் தலைவர் அண சொக்கலிங்கம் ஆகியோர் உரையாற்றி நல்ல கருத்துக்களை முன் வைத்தனர்.

கவனத்தை ஈர்க்கும் காணொளிக் காட்சிகள் மூலம் NBIG மற்றும் IBCNபற்றிய விபரங்கள் அனைவர் மனதிலும் எண்ணம் சிதறாமல் எடுத்தச் செல்லப்பட்டது.

IBCN 2013 ன் நோக்கம் தொழில் முனைவோர்க்குத் தூண்டுதலையும், IBCN 2015 ன் நோக்கம், அத் தூண்டுதலை ஊக்குவித்து நம்பிக்கை தருவதாகவும் அமைந்தது. IBCN 2017 ன் நோக்கங்களை விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் காணொளி மூலம் பேராளர்களின் கவனத்திற்கு கொண்டு  சென்றனர்.

வணிகத்தில் நாம் உயர வடிவமைக்கப்படும் வெற்றி அரங்கின் நான்கு தூண்களாகவும் ,உயரே எடுத்துச் செல்லும் நான்கு படிகளாகவும் இருக்கும் அந்த நான்கு முன்னோக்கங்கள்:


1. தொழில் நுட்ப அறிவைப் பகிர்தல்

    (Know How -Knowledge sharing)

2. குடும்பத்தாரின் ஒத்துழைப்பு

  ( Family support in business)

3. தொழில் முதலீட்டுக்கு உதவி

    ( Funding guidance/ assistance)

4. ஒருங்கிணைப்பு - வலைக்கட்டமைப்பு ( Net working)


வெற்றி  தொட்டவரின்  வேத  வரிகள்   9


விழாவின் முத்தாய்ப்பாக,  புகழ்பெற்ற AMM குழுமத்தின் தலைவர் திரு அ வெள்ளையன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் உரையில் , ஊழியராக இருக்கும் ஒருவர் தொழில் முனைவோராக மாறுவதற்கு ஊக்கம் பெற ஒன்பது யோசனைகளைத் தன் அனுபவத்திலிருந்து சொன்னது இளைய தலைமுறைக்கு வெற்றி மந்திரங்களாக  ஏற்கத் தகுந்தவை.


1. எண்ணத்தை விரைவில் முடிவாக மாற்றுவது

2. பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளிவந்து சவாலுக்குத் தயாராவது

3. எண்களைக் கொண்டே முடிவுகளை மேற்கொள்வது

4. ஏற்றுக்கொண்ட தொழிலை நேசித்தல் , அதன் நோக்கம் சார்ந்த செயல்பாடுகளையே முன் நிறுத்துதல்

5. மூச்சிலும் பேச்சிலும் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் செய்ய விளையும் தொழில் பற்றியே சிந்தித்தல்

6.அனுகூலம் தரும் அறவழியாலான 

அனுமதிக்கத் தகுந்த விதி மீறல்களை தயக்கமின்றி அரங்கேற்றுதல்

7.எதிர்பார்க்கத்தக்க இடர் வரவை ஏற்றுக் கொள்ளும் மன நிலையைக் கொண்டிருத்தல்

8.ஒரே கால கட்டத்தில் குறுகிய மற்றும் நீண்ட காலப் பார்வை கொண்டிருத்தல்

9. ' கலங்காது கண்ட வினைக்குள் துளங்காது தூக்கங் கடிந்து செயல்'

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க ,மனக்கலக்கமின்றி மேற்கொண்ட தொழில் எண்ணத்தை , சோர்வு ஏதும் தர வாய்ப்பின்றி , காலம் தாழ்த்தாமல் உடன் செய்து முடிக்க வேண்டும்.

IBCN 2017 ன் வலைத்தளம் ( www.ibcn2017.org) விழாவில் பங்கெடுத்த இன்னும் சில சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு காணொளி மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.

IBCN 2017 ன் செயலர் திரு ரமேஷ் ராமனாதன் மற்றும் இணைச் செயலர் திரு அண்ணாமலை( அம்மாஸ்) இணைந்து 2017 IBCN மாநாடு வரையிலான ஒரு வருட காலத்தில் செயல்படவிருக்கும் நிகழ்வுகளை தெளிவாக்கினர். தொடர்ந்து , IBCN 2017 நிகழ்வில் கலந்து கொள்ளும் பேராளர்களுக்கான பல தரப்பட்ட கட்டண அளவுகள் மற்றும் பதிவு செய்யும் முறைகளை விளக்கி , எமிரேட்ஸ் திரு பழனியப்பன் , பேராளர் பதிவுத் தொடக்கத்தை அறிவித்தார். இந்த நல் முயற்சிகள் அனைத்தையும் செயலுக்கு கொண்டுவந்து சிறப்புடன் பணியாற்ற தம்மை இணைத்துக் கொண்டுள்ள அனைத்து செயற் குழு உறுப்பினர்களும, அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் தனிப்பட்ட பணியைச் சார்ந்த குழுக்களாக  அறிமுகப்படுத்தப்பட்டனர். இறுதியாக IBCN 2017ன் பொருளாளர் திரு பழ கணேஷ் ,விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் , பேரளாராக ஆதரவு தர இருக்கும் அனைவருக்கும் , ஒத்துழைத்த உள்ளங்களுக்கெல்லாம் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

நம்பிக்கையூட்டும் நல்ல செய்திகள்:

***இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர் நேரிலும் , 400க்கும் மேற்பட்டோர் இணையம் ஊடான நேரலையின் மூலமும் கலந்து கொண்டது மிக உற்சாகம் தந்தது. பல வெளி நாடுகளிலுள்ள நம் சமூகத்தினர் வந்திருந்து சிறப்பித்தது பாராட்டுதலுக்குரியது.

*** 600 பேராளர்கள் பங்கு பெறும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டும் வரும் நிலையில் முதல் நாளிலேயே விழாவின் அதே தினத்தில் 150 பேராளர்கள் , தங்களின் IBCN 2017க்கான பதிவை உறுதி செய்தார்கள் என்பது உற்சாகத்தின் உச்சம்.

**** IBCN 2017 ன் தலைவர் திரு சொக்கலிங்கம் அவர்களிடம் , விழா தினத்தில் , பல நகரத்தார் அமைப்புக்கள்  2019 , 2021 மற்றும் 2023 வரையிலான IBCN மாநாடுகளை நடத்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என்று அறியும் போது , நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதை நிரூபிப்பதாகவும் , எய்யப்பட்ட அம்பு இலக்கை நிச்சயம் அடையும் என்ற நம்பிக்கையையும் தருகிறது.

இனிய தமிழில் நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்கிய திரு தேவகோட்டை ராமனாதனின் தமிழ் சொல் வளமும் , நேர ஆளுமைத் திறனும் நம்மையெல்லாம் கவனச் சங்கிலியால் கட்டி வைத்தது எனலாம்.

இந்த விழாவின் முழு காணொளியையும் காண நீங்கள் அனைவரும் www.n-big.com என்ற இணய தளத்தினையும் , IBCN 2017ல் பேராளராக பதிவு செய்ய www.ibcn2017.org என்ற இணைய தளத்தினையும், உபயோகிக்க வேண்டுகிறோம்

நம்பிக்கை விதைக்கு நல்ல நீர் விடுங்கள்!

நம் சமூகம் உயர , வணிகத்தில் வளர !

பலம் சேர்ப்போம் ; தொழில் முனைய!

வளமான நாளை வரவேற்போம்!

"Thoghuppu :  AL.Murugappan ,Devakottai ( Dubai ) "