Nagaratharonline.com
» All
» Interview
» Article
Article
     
 


முதலில் அண்ணாமலை பல்கலைகழகத்தின் வரலாறு...





செட்டிநாடு பகுதியில் அரசோட்சிக் கொண்டிருந்த அண்ணாமலை செட்டியார் வட மாவட்டங்களில் கல்வியின்மை மற்றும் மேல்படிப்புக்கு வசதி இன்மை ஆகியவற்றை அறிந்து, அதனை போக்க சிதம்பரம் வந்து தன்னுடைய சொத்திலிருந்து சில லட்சங்களை செலவழித்து  மீனாட்சி கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்லூரியை தொடங்கினார்.அந்த நேரத்தில் சுவாமி சகஜானந்தர் சிதம்பரத்தில் நந்தனார் கல்விக் கழகத்தை தொடங்கி கல்விக் கூடம் ஆரம்பித்தார். இரண்டுக்கும் போட்டி வந்துவிடக் கூடாது என்பதற்காக இருவரும் சந்தித்து பேசி நந்தனார் கல்வி கழகம் பள்ளிப்படிபையும், மீனாட்சிக் கல்லூரி மேல் படிப்பையும் வழங்குவது என்று முடிவெடுத்து செயல்படுத்தினார்கள்.



ஒரு சில மேல் படிப்புகளோடு துவங்கிய மீனாட்சி கல்லூரியின் சேவை அதிகரித்து இன்னும் அதிக மக்களை சென்றடைய ஆரம்பித்தது.அதனால் இன்னும் பெரிதாக்க விரும்பினார்.அதன் விளைவாக இருபது லட்சம் ரூபாயையும் ஊராட்சி பிரதிகளிடம் ஒப்படைத்து கல்லூரியை பல்கலைகழகமாக ஆக்கினார்.1928 ஆம் ஆண்டு மீனாட்சி கல்லூரி அண்ணாமலை பல்கலைகழகமாக உருவெடுத்தது. இதில் அண்ணாமலை செட்டியார் அவரது காலத்துக்குப் பின் அவரது வாரிசுகள் ஆகியோருக்குத்தான் எல்லா அதிகாரங்களும் இருக்கும் வகையில் பல்கலைகழக சட்டம் உருவாக்கப்பட்டது.அந்த சட்டத்தில்தான் தமிழகத்தை சேராத வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு கல்வி பயில அனுமதி இல்லை என்ற விதியும் இருக்கிறது.



அன்றிலிருந்து இன்றுவரை அண்ணாமலை செட்டியார், முத்தையா செட்டியார், ராமசாமி செட்டியார் என்று செட்டியார் குடும்பத்தினர் பல்கலைகழகத்தின் இணைவேந்தராக சர்வ அதிகாரம் படைத்தவர்களாக விளங்கினார்கள்.முந்தைய இருவர் இணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் பல்கலைகழகம் சிறப்பான முறையில் கல்விச்சேவையை அளித்து வந்தது மறுப்பதற்கில்லை.



 
தன வணிகம் செய்துவந்த செட்டியார்​களுக்கு அந்தக் காலத்தில் பர்மா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு தொழில்கள் இருந்தன. அதன் மூலம் திரட்டிய செல்வத்தில் சொத்துக்களை வாங்கினர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய செட்டிநாட்டு அரசர் அண்ணாமலைச் செட்டியாருக்கும் பர்மாவில் ஏராள‌மான சொத்துக்கள் இருந்தன. இரண்டாம் உலகப் போரில் பர்மாவில் இருந்த செட்டி​மார்கள் தங்களது சொத்துக்களை இழந்தனர். அதை மீட்க இன்றளவும் போராடுகிறார்கள். ஆனால், அண்ணாமலைச் செட்டியார் குடும்பம், ஆங்கிலேயர் ஆசியோடு அந்தச் சொத்துக்களை அப்படியே மீட்டது.

அண்ணாமலைச் செட்டியார் குடும்பத்தாரின் வசதிக்காக செட்டிநாட்டில் உள்ள அவர்​களது பங்களா வாசலுக்கே ரயில் பாதையைக் கொண்டுபோனது பிரிட்டிஷ் அரசாங்கம். இன்றுவரை, அந்த வழியாகச் செல்லும் ரயில்கள் அனைத்தும் பங்களா வாசலில் நின்று செல்கின்றன‌. அவ்வளவு செல்வாக்குடன் இருந்தவர்கள்தான் இப்போது பூர்வீகச் சொத்தான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுக்கு கட்டாய‌ உயில் எழுதிவைத்திருக்கிறார்கள்.

''1928-ம் வருடத்துக்கு முன்புவரை தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்​கழகம் மட்டுமே இருந்தது. அப்போது, சிதம்பரத்தில் அண்ணாமலைச் செட்டியார், மீனாட்சி கல்லூரியை நடத்திவந்தார். தமிழுக்கும் இசைக்கும் சேவைசெய்கிறோம் என்று சொல்லி சிதம்பரத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க அரசர் தரப்பில் அரசுக்குக் கோரிக்கைவைத்தார்கள். இதற்காக, 20 லட்ச ரூபாயும் 500 ஏக்கரும் தருவதற்கு அரசர் ஒப்புக்கொள்ள, சென்னை ராஜதானி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அண்ணா​மலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிக் கொடுத்தது அரசு.

அண்ணாமலைச் செட்டியார் குடும்பத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குள் வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன‌. அண்ணாமலைச் செட்டியாரும் அவரது வாரிசுகளும் பல்கலையின் இணை வேந்தர்களாகத் தொடரலாம், இணை வேந்தரே பல்கலையின் அனைத்து அதிகாரங்களும்கொண்டவர் என்றெல்லாம் அதிகாரங்களை வாரி வழங்கினர். 1948 வரை அண்ணாமலைச் செட்டியார் இணை வேந்தராக இருந்தார். அவர் காலத்தில், தமிழையும் இசையையும் வளர்த்தனர். அவருக்குப் பிறகு, அவரது மகன் முத்தையா செட்டியார் 84-ம் ஆண்டு வரை இணை வேந்தராக இருந்தார். அதுவும் பல்கலைக்குப் பொற்காலமாக இருந்தது. அதற்குப் பிறகுதான், பிரச்னைகள் தொடங்கின'' என்கிறார் பல்கலையின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவரும் சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர் பதவிகளை வகித்தவருமான பேராசிரியர் ஆறு.அழகப்பன் செட்டியார்.

மேலும் அவர், ''அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேலை முடிச்சுத் தர்றேன், ஸீட் வாங்கித் தர்றேன் என்று பல புரோக்கர்கள் இருக்கி​றார்கள். பல்கலைக்கழகத்தில் பணியில் இருக்கும் ஆறு கிளர்க்குகள் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கார் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் செட்டிநாட்டு அரசரின் பேர​னுக்குத் தெரியாமலா இருக்கும்? துணை வேந்தர்களாக வருபவர்களுக்கு சில தகுதிகள் வேண்டும். ஆனால், இங்கே அந்தத் தகுதி எதுவும் தேவை இல்லை. கணக்குப்பிள்ளை வேலை பார்க்கிறவர்கள் தங்களுக்கு வேண்​டப்பட்ட மூன்று நபர்களின் பெயர்களை எழுதி செட்டியாரிடம் கொடுப்பார்கள். அதில் ஒருவரை அவர் டிக் செய்வார். அவர்தான் அடுத்த துணை வேந்தர். இப்படிப் பலர் அடிப்படை தகுதிகள் ஏதும் இல்லாமல் பணியில் இருக்கிறார்கள்.

பல்கலைக்கழகங்களில் ஊழியர் சம்பளம், நிர்வாகச் செலவினங்களுக்காக ஆகும் செலவில் 40 சதவிகிதத்தை தமிழக அரசு கொடுக்கிறது. எஞ்சிய 60 சதவிகித நிதியை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை மூலமாகத் திரட்டிக்கொள்ளலாம். இப்படித் திரட்டப்படும் நிதியில் பெரும்பகுதி பல்கலைக்கழகத்தின் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. பணத்தை வாங்கிக்​கொண்டு தேவைக்கு அதிகமாக ஆட்களைச் சேர்த்துவிட்டனர். இதனாலும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. கொதித்த ஊழியர்கள் வீதிக்கு வந்துவிட்டனர். தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு பல்கலைக்கழகத்தை அரசுடமை ஆக்கிவிட்டது'' என்று விவரித்தார் அழகப்பன்.

''அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இந்த விஷயம் முதல்வர் கவனத்துக்குப் போனதும், அதுகுறித்த தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். கல்வித் துறை உயர் அதிகாரிகள் சிலருடன் ஆலோசனை நடத்திய முதல்வர், செட்டியார் குடும்பத்தில் உள்ள முக்கியமான ஒருவரையும் அழைத்துப் பேசியுள்ளார். அவரிடம் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். அதன்பிறகே, பல்கலைக்கழகத்தை அரசே எடுத்து நடத்தும் என்று அறிவித்துவிட்டார் முதல்வர்'' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் - ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்​பாளர் உதயச்சந்திரனிடம் பேசினோம். ''அண்ணா​மலைப் பல்கலைக்கழகம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அது இப்போதுதான் நிறைவேறியுள்ளது. 32 வருடப் போராட்டத்தின் வெற்றி இது. பணக்காரர்களுக்கு மட்டுமே இந்தப் பல்கலைக்கழகத்தில் படிப்பு என்ற அவலநிலை இருந்தது. அது இனி தகர்க்கப்பட்டு பாமர மக்களுக்கும் கல்வி என்ற உயர்ந்த நோக்கை நோக்கிச் செயல்படப்போகிறது. திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தமிழக அரசின் மூலம் சட்டமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மசோதாவுக்கு இதுவரை எந்த எதிர்ப்பும் இல்லை. தமிழக அரசின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அத்தனை பேரின் வாழ்க்கையிலும் விளக்கேற்றியுள்ளது தமிழக அரசு. இந்த நன்றியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்'' என்று நெகிழ்ந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக இணை வேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமியைத் தொடர்புகொண்டோம். அவர் இதுபற்றிப் பேச மறுத்துவிட்ட நிலையில், அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியவர்கள், ''பல்கலைக்கழகம் அரச பரம்பரையில் வந்த சொத்து. செட்டியார்கள் பலரும் தங்களுடைய சொத்துக்களை கோயிலுக்கு எழுதிவைத்த நிலையில், அண்ணாமலைச் செட்டியார் மட்டும்தான் கல்விக்​காக அர்ப்பணித்தார். அப்படிப்பட்ட குடும்பச் சொத்தை எப்படி அரசுக்குத் தாரைவார்க்க முடியும்? இதை சட்டரீதியாக சந்திக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்'' என்று சொன்னார்கள்.

மொத்தத்தில், பொன் முட்டையிடும் வாத்தை பொளந்து பார்த்துவிட்டனர்.
 
Source:Junior Vikatan, April 2013